சேலம் மாநகர் அஸ்தம்பட்டி பகுதியில் மத்திய சிறை அமைந்துள்ளது. இந்த சிறையில் கைதிகளுக்கு பல்வேறு உதவிகளை அங்குள்ள சிறை காவலர்கள் செய்வதாக தொடர்ச்சியான புகார்கள் வந்தது. அதற்கு ஏற்றார்போல கடந்த ஆண்டில் கைதிகளை தப்பவிட்டது.


விடுதலை ஆன கைதியை மற்றொரு வழக்கில் கைது செய்ய காத்திருந்த காவலர்களிடமிருந்து கைதியை தப்பவிட்டது போன்ற காரியங்களில் மத்திய சிறையில் காவலர்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மத்திய சிறையில் கைதிகளிடமிருந்து தொடர்ந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. சேலம் அம்பாள் ஏரி ரோட்டை சேர்ந்த வழிப்பறி வழக்கில் கைதான ரஞ்சித் குமார், சேலம் மத்திய சிறையில் 7வது பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ளார். குண்டர் சட்டமும் அவர் மீது பாய்ந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் சிறையின் சோதனை குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திடீர் சோதனை நடத்தினர். 


அப்போது ரஞ்சித்திடம் இருந்து சிம்கார்டுடன் கூடிய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த செல்போனை சிறை அதிகாரிகள் அஸ்தம்பட்டி காவல்துறை இடம் ஒப்படைத்தனர். வழக்கமாக சிறையில் செல்போன் பறிமுதல் செய்யப்படுவதும், காவல்துறையிடம் புகார் கொடுப்பதுமாக இருந்து வருகிறது. ஆனால் காவல்துறை அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்குவதில்லை என புகார் எழுந்துள்ளது. சிறையை பொருத்தவரையில் கைதிகளை நன்றாக சோதனை செய்த பிறகே சிறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அவர்களிடம் எப்படி தடை செய்யப்பட்ட செல்போன், கஞ்சா வருகிறது? என கேள்வி எழுகிறது. சிறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் கைதிகளுக்கு எதுவும் செல்லவாய்ப்பு இல்லை என காவல்துறையினர் கூறுகின்றனர். மேலும் உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் சிறை அதிகாரிகளின் வேண்டுகோளாக இருக்கிறது. இதில் காவல்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் செல்வது தடுக்க முடியும். இதற்கான முயற்சியை காவல்துறையினர் எடுக்க வேண்டும் என்று சிறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். 



இதேபோன்று சேலம் மாவட்டம் ஆத்தூரில் மாவட்ட சிறை செயல்பட்டு வருகிறது. இங்கு 55 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் திடீர் சோதனை நடத்தினார். பணியில் இருக்க வேண்டிய வார்டன்கள் அனைவரும், ஒன்றாக சிறையின் வெளிப்பகுதியில் இருந்தனர். அங்குள்ள கார்டு அறையில் சோதனை செய்தபோது 200 பீடி கட்டுகள், 20க்கும் மேற்பட்ட தீப்பெட்டிகள், சீட்டுக்கட்டுகள் இருந்தது. இவை எதற்காக இங்கிருக்கிறது? என வார்டன்களிடம் கேட்டபோது. அவர்கள் சரியான தகவலை தெரிவிக்கவில்லை. முதற்கட்ட விசாரணையில் கைதிகளுக்கு சப்ளை செய்ய வைத்திருந்தது தெரியவந்துள்ளது. அன்று பணியில் இருந்த அனைவரையும் விசாரணைக்கு சேலம் வருமாறு சிறை எஸ்.பி. தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். அனைவரிடமும் விசாரணை நடந்து வருகிறது. ஆனால் அங்குள்ள சிறை அதிகாரி, கைதிகளை பார்க்க வந்த உறவினர்கள் கொண்டு வந்த பீடிகளை பறிமுதல் செய்து அங்கு வைக்கப்பட்டிருந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.


எத்தனை நாட்ளில் இந்த பீடிக்கட்டுக்கள் வந்தது? என்ற கிடுக்கிப்பிடி விசாரணை நடந்து வருகிறது. சரியாக பங்கு கிடைக்காத காரணத்தினால்தான் சிறை வார்டன்களே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து சிக்க வைத்துள்ள தகவலும் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சிறை விஜிலென்ஸ் அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.