தமிழகத்தில் கொரோனா பரவலின் பாதிப்ப தினசரி 33 ஆயிரத்திற்கும் அதிகமான அளவில் பதிவாகி வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இதே அளவில்தான் பாதிப்பு பதிவாகி வருகிறது. இந்த சூழலில், நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கருப்பு பூஞ்சையின் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இந்த தொற்றின் பாதிப்பு ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிகளவில் காணப்பட்டு வருகிறது.


தமிழகத்திலும் இந்த தொற்றின் தாக்கம் சில மாவட்டங்களில் காணப்பட்டு வருகிறது. கருப்பு பூஞ்சை நோய் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று ஏற்கனவே சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்திருந்தார். இருப்பினும் கருப்பு பூஞ்சை குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக அரசு சார்பில் 10-க்கும் மேற்பட்டோர் அடங்கிய வல்லுனர்கள் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த நிலையில், இந்த குழுவினருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு, மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “கருப்பு பூஞ்சை நோய், ஸ்டீராய்டு கொடுப்பதால் ஏற்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 400 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை வார்டுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.




ஓமந்தூரார் மருத்துவமனையில் இன்று கருப்பு பூஞ்சை வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஒவ்வொரு மருத்துவமனைக்கும் நோடல் அதிகாரி நியமிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அதிகாரி நியமிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.


கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க போதுமான அளவு மருந்துகள் கையிருப்பில் உள்ளன. கருப்பு பூஞ்சை நோய் குறிப்பாக கண்கள், மூக்கு, மூளையை பாதிக்கிறது. இது ஏற்கனவே இருக்கும் வியாதி. கொரோனாவிற்கு பின் இந்த வியாதி வரவில்லை. மேலும், கருப்பு பூஞ்சை நோய் குணப்படுத்தக்கூடிய நோய் ஆகும். எனவே, மக்கள் யாரும் கருப்பு பூஞ்சை குறித்து பயப்படத்தேவையில்லை.


நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது பூஞ்சை தொற்று ஏற்படுகிறது. சர்க்கரை நோயாளிகள், ஆஸ்துமா இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். முதலிலே இதனை கண்டுபிடித்தால் கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்த முடியும். மேலும், கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட்டவர்களில் 75 சதவீதம் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள். கருப்பு பூஞ்சை தொற்றை கட்டுப்படுத்தவும், இந்த நோய் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்” எனக் கூறினார். ஏற்கனவே கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையால் அச்சத்தில் மக்கள் உள்ளன்ர. இந்த சூழலில், தமிழகத்தில் மட்டும் 400-க்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.