கொரோனா பெருந்தோற்று வந்த காலத்தில் இருந்து வித்தியாச வித்தியாசமான திருமணங்களை நம் முன் நிகழ செய்திருக்கிறது இந்த சூழ்நிலை. வீட்டிலேயே நடக்கும் திருமணங்களும், செலவு குறைவான திருமணங்களும், அதிக பேரை அழைக்காத திருமணங்களும், முடிந்த பிறகு லாக்டவுன் நேரத்தில் செய்ததால் அழைக்க முடியவில்லை என்று காரணம் சொல்லிக்கொள்வதும், நம் அன்றாட வாழ்வின் நியூ நார்மல் வாழ்வின் அங்கமாகிவிட்டது. ஆனால் அதிலும் விசித்திரமாக மருத்துவமனையிலேயே கொரோனா நோயாளி பிபிஇ கிட் அணிந்து திருமணம் செய்துகொள்ளும் காட்சிகள் எல்லாம் அரங்கேறி இருக்கின்றன. ஆனால் விழுப்புரத்தில் தாயின் ஆசையை நிறைவேற்றுவதற்காக மருத்துவமனையிலேயே மகன் திருமணம் செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்தேறி இருக்கிறது.



விழுப்புரம், திருக்காமு நகரைச் சேர்ந்த 40 வயதாகும் தயாளன் என்பவர் பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதிவறை எழுத்தராக பணியில் உள்ளார். இவருக்கு 40 வயதாகியும்  திருமணம் ஆகவில்லை. இவரது  67 வயதான தாய் முத்தாளம்மாள். இரண்டு நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். தொற்று பாதித்த நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மேலும் மேலும் மோசமாக மாறிவரும் நிலையில் தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். முத்தாலம்மாளுக்கு தன் மகன் தயாளனுக்கு இத்தனை வயதாகியும் திருமணமாகாத ஒரே வருத்தம் உறுத்திக்கொண்டே இருந்திருக்கிறது. அதனை அவர் மகனிடம் கூறி திருமணம் செய்து பார்க்க முடியவில்லை என கண் கலங்கி இருக்கிறார். அதனை கேட்ட மகன் தயாளன், உடனடியாக, மருத்துவமனையில் தாயை பார்க்க வந்திருந்த 30 வயதாகும் மாமன் மகள் காயத்ரி என்பவரை திருமணம் செய்துகொள்ளலாம் என்ற யோசனை தோன்றியிருக்கிறது. உடனே பெண்ணிடமும் உறவினர்களிடமும் அது குறித்து பேசியிருக்கிறார் தயாளன். அனைவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.



சம்மதம் தெரிவித்ததை அடுத்து உடனடியாக திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்ய சொல்லி இருக்கிறார். இதையடுத்து, மருத்துவமனை நுழைவு வாயிலிலேயே ஒரு அம்மன் கோவில் இருந்துள்ளது. அதுவே அருகிலிருப்பதாலும் அம்மாவை அதிக தூரம் கூட்டிச் செல்ல முடியாததாலும் அங்கேயே திருமண விழாவை வைக்க முடிவு செய்தார். இந்நிலையில் நேற்றைய நாளில் பகல் 3:45 மணிக்கு அந்த அம்மன் கோயிலிலேயே மாமன் மகள் காயத்ரிக்கு தாலி கட்டி திருமணம் செய்துகொண்டார். பின், தாயிடம் ஆசி வாங்க மருத்துவமனைக்குள் மணமக்கள் சென்றனர். கொரோனா வார்டினுள் டாக்டர்கள், அனுமதிக்காததால், தாயிடம் தகவலை தெரிவிக்குமாறு கூறிவிட்டு மொபைலில் விடியோ கால் செய்து திருமண கோலத்தை காண்பித்து ஆசி பெற்றுள்ளனர். பின்னர் திருமணம் செய்துகொண்ட புது மண தம்பதியினர் வீட்டிற்கு சென்றனர். மருத்துவமனையில் நடந்த திடீர் திருமணத்தாலும் கூட்டம் கூடியதாலும் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.