தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.



 

இதன் காரணமாக இன்று தென்காசி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், மதுரை, விருதுநகர், சிவகங்கை, கடலூர், டெல்டா மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 



 

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இரவு 11 மணி முதல் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம்,  சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத்  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில்  பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 83 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 139 ஏரிகள் 70%-100% ,  119 ஏரிகள் 50% - 75% , 219 ஏரிகள் 25% - 50% , 349 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவாக நிறைந்துள்ளதாக பொது துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 



 

சென்னையில் எம்.ஆர்.சி. நகர், பட்டினப்பாக்கம், மெரினா கடற்கரை, மந்தைவெளி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. அதேபோல் சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், பழையனூர், புலிப்பாக்கம், மேல் ஏரிப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில்  கன மழை பெய்தது. மாவட்டத்தில் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் அவதி.

 



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்.


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண