சென்னையில் 300 ஆண்டுகள் பழமையான நடராஜர் மற்றும் மாரியம்மன் சிலைகளை சிலைத் திருட்டு தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். 


ரகசியத் தகவல்


ரகசியத் தகவலின்பேரில் சென்னை, அண்ணா நகரில் வீடு ஒன்றில் சோதனை மேற்கொண்ட போது இந்தச் சிலைகளை உரிமையாளர் உரிய ஆவணங்களின்றி வைத்திருந்தது தெரிய வந்த நிலையில் 2 சிலைகளையும் சிலை கடத்தல்  தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.


இந்தச் சிலைகள் கள்ளச்சந்தையில் பல கோடி ரூபாய்க்கு விலை போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலைகள் எந்தெந்த கோயில்களுக்குச் சொந்தமானவை என விசாரணை மேற்கொண்டு வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட சிலை


இதேபோல் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி 50 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிலை ஒன்று அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. கும்பகோணம் தண்டந்தோட்டத்தில் உள்ள நடனபுரீஸ்வரர் சிவன் கோயிலில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு பார்வதி சிலை ஒன்று காணாமல் போனது. இது குறித்து 1971 ஆம் ஆண்டு , தண்டந்தோட்டம் பகுதி வாசிகள் , உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்திருக்கின்றனர்.


இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டதால் மீண்டும் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்பகுதியை சேர்ந்த கே.வாசு என்பவர் மீண்டும் புகார் அளித்திருக்கிறார். வழக்கின் பேரில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால்  எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.


ஆனாலும் வழக்கில் எவ்வித நகர்வும் இல்லை. இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் எம்.சித்ரா தலைமையில் தீவிர விசாரணை நடைபெற துவங்கியது. அப்போதுதான் காணாமல் போன நடபுரீஸ்வரர் ஆலய பார்வதி தேவி சிலை வெளிநாடுகளில் உள்ள பல்வேறு அருங்காட்சியகங்கள் மற்றும் ஏல மையங்களில் கைமாறியது தெரிய வந்தது. 


இந்த நிலையில் காணாமல் போன சோழர்கால  பார்வதி தேவியின் சிலை நியூயார்க்கில்  உள்ள போன்ஹாம்ஸ் ஏல இல்லத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், சிலையை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் சிலைக்கடத்தல் பிரிவு சிறப்பு சிஐடி அதிகாரிகள் முன்னதாகத் தெரிவித்துள்ளனர். 


ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட சிலைகள்


இதேபோல் ஆஸ்திரேலியாவில் இருந்து 13 இந்திய சிலைகளை, சிலை தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த ஏப்ரல் மாதம் மீட்டுள்ளனர்.


அமெரிக்காவில் உள்ள ஏல் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் பழங்கால இந்தியச் சிலைகள் இருப்பதாகச் சிலை கடத்தல் பிரிவு அதிகாரிகளுக்கு முன்னதாகத் தகவல் வந்தது.


இதையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் 13 இந்திய சிலைகளை மீட்டுள்ளனர். இதில் சோழர் காலத்து நடனமாடும் சம்பந்தர் சிலையும் ஒன்று. இந்நிலையில், மீட்கப்பட்ட இந்த சிலைகள் தொடர்ந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன.




மேலும் படிக்க: Imran Khan on Salman Rushdie: ’இஸ்லாமியர்களின் கோபம் புரிகிறது... ஆனால் நியாயப்படுத்த முடியாது’ - சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் குறித்து இம்ரான் கான்


Chinese Spy Ship: இலங்கையில் சீன ‘உளவு’ கப்பல்.. இந்தியாவின் ப்ளான் என்ன? நிலைமையைச் சொன்ன அமைச்சர் ஜெய்சங்கர்!