மாநில அரசின் கௌரவ பிரச்சனையாக பார்க்காமல், மத்திய அரசின் மும்மொழிக் கல்வி, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று தனியார் பள்ளிகள் தாளாளர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 


மாநில கல்விக் கொள்கை குழுவின் தலைவரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான முருகேசனிடம் தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர்கள் ஒன்றிணைந்து, மாநிலக் கல்விக் கொள்கை குறித்து இன்று கருத்துக்களைத் தெரிவித்தனர். இதில் தனியார் பள்ளிகள் தாளாளர்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளதாவது: 


''தமிழகத்தில் எந்த வகையிலும் தேசிய கல்விக் கொள்கைக்கு குறைவுபடாத வகையில் மாநில கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழக அரசு மாணவர்களுக்கு வழங்கும் நலத்திட்டங்களை தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகள் என்ற பாகுபாடுகளை நீக்கி, அனைவருக்கும் ஒரே மாதிரியான சலுகைகள், இட ஒதுக்கீடுகள் வழங்கப்படுவதை உறுதி செய்தல் வேண்டும்.


பயிற்று மொழியாகத் தாய்மொழி


குழந்தைக் கல்வி முதற்கொண்டு ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி அல்லது வட்டார மொழியை பயிற்று மொழியாகக் கொண்டு போதிக்கப்பட வேண்டும்.


பள்ளிகளை குழந்தைக் கல்வி முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆரம்பநிலைப் பள்ளி என்று அழைத்தல் வேண்டும். குழந்தைக் கல்வி முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகள் என்று அழைத்தல் வேண்டும். குழந்தைக் கல்வி வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் உயர்நிலைப் பள்ளி என்றும் அழைத்தல் வேண்டும்.


குழந்தைக் கல்வி முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் மேல்நிலைப் பள்ளி என்று அழைத்தல் வேண்டும்.


தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இன்றைய காலகட்டத்தில் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு பணி நிமித்தமாக இளைஞர்கள் செல்ல வேண்டி உள்ளதால் மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலம் தவிர வேறு பல மொழிகளின் தொகுப்பில் உள்ள கூடுதலாக ஒரு மொழி தேர்வு செய்யப்பட்டு மூன்று மொழிகளைக் கற்கும் (மும்மொழி கல்விக் கொள்கை) வாய்ப்பினை மாணவர்களுக்கு வழங்குதல் வேண்டும்.


இத்தகைய முறை வரும் காலங்களில் நம் மாணவர்களை சிறந்த போட்டித் தேர்வுகளை தேசிய அளவில் எதிர்கொள்ளும் வகையில் அமையவில்லை எனில் அவர்களின் எதிர்காலம் பாதிக்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.


ஆசிரியர்களுக்கு போட்டித் தேர்வு குறித்த பயிற்சி


சமீப காலங்களில் தமிழக ஆசிரியர்களின் போதிக்கும் திறன் மிகக் குறைவான அளவில் மட்டுமே உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. எண்ணற்ற தனியார் பள்ளிகள் NEET/ IIT/ JEE போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி கொடுக்க ஆந்திரா மற்றும் தெலங்கானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து ஆசிரியர்களை அழைத்து வரும் நிலை எதனால் என்பதை அரசு உற்று நோக்க வேண்டும். எனவே நம் தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு சிறந்த புத்தாக்க பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.




தமிழ்நாட்டில் மாணவ, மாணவிகளிடையே ஒழுக்கக் கேடான செயல்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். எதிர் வரும் மாநிலக் கல்விக் கொள்கை மாணவர்களை நம் தாய் திருநாட்டிற்கான கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம், தெய்வ பக்தி மற்றும் தேசபக்தியுடன் கூடிய நல் உணர்வுகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகளையும், மாணவர்கள் ஒழுக்கக்கேடாக நடந்து கொள்கிறபோது சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறபோது அவர்களைக் கண்டிக்கவும் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கும் அதிகாரம் ஆசிரியர்களுக்கு வழங்கிடும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும்.


நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் கல்விக்கொள்கை


மாணவர்கள் உயர் கல்வி கற்க கல்லூரிகளுக்குக் செல்லும் போது கண்டிப்பாக மத்திய அரசு உருவாக்கியுள்ள தேசிய தேர்வு முகமை (National Testing Agency) நடத்தும் நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும். அதற்குத் தக்கவாறு நமது கல்விக் கொள்கை அமைய வேண்டும்.


தேசியக் கல்விக் கொள்கை தொழிற்கல்விக்கு (Skill Development) முக்கியத்துவம் கொடுப்பதாக உள்ளது. அப்படியானால் தொழிற்கல்வி குறித்து மாநிலக் கல்விக் கொள்கையின் நிலைப்பாடு குறித்து மாணவர்கள் மத்தியில் உறுதிப் படுத்துதல் வேண்டும்.


கல்வி என்பது ஒரு தேசத்தின் கண்களாகும். இளம் தலைமுறையினரை செம்மைப்படுத்தி இந்த மண்ணை வளமாக்க வேண்டுமெனில் கல்வியில் மிகப்பெரிய அளவில் மாற்றங்களும் சீர்திருத்தங்களும் உடனடி தேவை. எனவே அதற்கேற்றாற்போல் மாநில கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட வேண்டும்.


ஐந்தாம் வகுப்பு வரை கட்டாயம் தாய்மொழியான தமிழில்தான் இருத்தல் வேண்டும். தாய் மொழியில் எழுதவும், படிக்கவும், பேசவும் தெரிந்த மாணவரால்தான், பிற மொழியிலும் வளம் பெற முடியும். ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாக ஒன்றாம் வகுப்பு முதல் இருத்தல் வேண்டும்.


NEP 2020 யின்படி, ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியை வலியுறுத்துகிறது. ஆகையால் தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பாடத்திட்டம் (CBSE, ICSE, IGC, IB) கொண்ட பள்ளிகளிலும் இந்தக் கட்டுப்பாட்டை கொண்டுவர வேண்டிய சட்டத்தை இயற்ற வேண்டும்.


மும்மொழி கட்டாயமாக இருத்தல் வேண்டும். மூன்றாவது மொழியை பெற்றோர் தேர்வு செய்ய அனுமதிக்கவேண்டும்.


முன்பு தச்சு, கைத்தறி தையல் போன்ற கைத்தொழில்கள் அரசு பள்ளிகளிலேயே கற்றுத் தரப்பட்டன. இதேபோல், புதிய கல்வி கொள்கையிலும் கைத்தொழில் கல்விக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.


மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் நீதிபோதனைக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.


தேசிய கல்விக் கொள்கை திட்டங்களை தமிழக அரசு பெயர் மாற்றி இல்லம் தோறும் கல்வி, புதிய பாரத எழுத்தறிவு திட்டம், எண்ணும் எழுத்தும் என பல திட்டங்களை அறிவித்துள்ளதையும் கவனத்தில் கொண்டு மாநில அரசின் கௌரவ பிரச்சனையாக பார்க்காமல், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்.


மாணவர்களுக்கு CAPACITY BUILDINGS CARRIER GUIDENCE போன்றவற்றிற்கு தகுந்தவாறு கல்விக் கொள்கை வடிவமைக்க வேண்டும்.


மாணவர்களுக்கு சுய ஒழுக்கம், தன்னம்பிக்கை ஆகியவற்றை முழுமையாக போதிப்பதாக கல்விக் கொள்கை இருக்க வேண்டும்''.


இவ்வாறு தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.