சென்னையில் நடந்த ராணுவத் தேர்வில் வசூல்ராஜா பாணியில் புளூடூத் பயன்படுத்தி காப்பி அடித்த 28 ஹரியானா மாணவர்களை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். 


பள்ளித் தேர்வோ! கல்லூரித் தேர்வோ! போட்டித் தேர்வோ! எல்லோருக்குள்ளும் ஒரு சிறிய பயம் இருக்கும். தேர்வினை எப்படியாவது வெல்ல வேண்டும் என்பது. அதற்கு ஒரு சிலர் கனவுகளோடு படித்து தேர்வினை எதிர் கொள்வார்கள். ஒருசிலர் கடமைக்கென தேர்வு எழுதுவார்கள், அதிலும் ஒரு சிலர் எதற்கு படித்துக் கொண்டு, காப்பி அடித்து எழுதுவோம், அல்லது ’பிட்’ தயார் செய்து எழுதுவோம் என்ற மனநிலையில் இருப்பார்கள். அவ்வாறாக தேர்வினை எழுதிவிட்டு மாட்டிக் கொண்டும் தவிப்பார்கள். ஆனால், சென்னையில் நடந்திருப்பதோ மிகவும் சாதரணமான நிகழ்வு இல்லை. 


நமது ஊரில் டி.என்.பி.எஸ்.சி தேர்வோ அல்லது காவலர் பணிக்கான தேர்வோ வேறு எதாவது போட்டித் தேர்வோ மிகவும் கட்டுக்கோப்புடனும் பல கட்ட சோதனைகளுக்குப் பின்னர் தான் தேர்வு அறைக்குள்ளேயே தேர்வர்கள் நுழைய முடியும். அவ்வாறு இருக்கையில் சென்னையில் நடந்த ராணுவத் தேர்வுக்கான தேர்வில் நடந்துள்ள சம்பவம் மிகவும் அதிர்ச்சி அடையச் செய்கிறது. 


சென்னை, நந்தம்பாக்கத்தில்  ராணுவப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இரு தினங்களுக்கு முன்னர் இந்த ராணுவப் பள்ளியில், ராணுவப் பணிகளுக்கான குரூப்-சி தேர்வு மிகவும் கட்டுக்கோப்புடன் நடைபெற்றது. இந்தத் தேர்வில் வேற்று மாநில மற்றும் தமிநாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் உட்பட 700-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். தேர்வு நடந்துகொண்டிருந்தபோது, தேர்வு எழுதிக்கொண்டிருந்த சில தேர்வர்கள்மீது அங்கிருந்த அறை கண்காணிப்பாளருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 


அதற்கடுத்து, அந்த தேர்வர்களை தனியாக அழைத்து சோதனையிட்டபோது, அவர்கள் மிகச் சிறிய அளவிலான ப்ளூடூத்தை பயன்படுத்தித் தேர்வினை எழுதி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  முறைகேட்டில் ஈடுபட்டு தேர்வு எழுதிய 28 பேரும்   ஹரியானா மாநிலத்திச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேற்கொண்டு நடைபெற்ற விசாரணையில், ஒரு தேர்வருக்குப் பதில் இன்னொருவர் தேர்வு எழுதி ஆள்மாறாட்டம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ராணுவத் தேர்வில் முறை முறைகேட்டில் ஈடுபட்ட ஹரியானா மாணவர்கள் மீது தேர்வு கண்காணிப்பாளர்கள் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து நந்தம்பாக்கம் பகுதி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்தனர். 


விசாரணைக்குப் பிறகு அவர்களிடமிருந்த ப்ளூடூத் சாதனங்கள் மற்றும் ஆவணங்கள்  பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையைத் தொடர்ந்து ஹரியானா இளைஞர்கள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள்மீது தேர்வு முறைகேடு தொடர்பாக வழக்கு தொடரப்பட்டிருப்பதால் ஹரியானா இளைஞர்கள் அனைவரும் ராணுவப் பணிக்கு மேற்கொண்டு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த தேர்வில் கலந்து கொண்ட தமிழ்நாடு இளைஞர்கள், ஹரியானா மாநில இளைஞர்களின் தேர்வு முறைகேட்டினை கேள்விப்பட்டு, வசூல்ராஜா படத்தில் கமல்ஹாசன் புளூடூத் பயன்படுத்தி காப்பி அடிக்கும் காட்சியினை நினைவு கூர்ந்து சென்றுள்ளனர்.