குரூப்-4 தேர்வில் ஒரே பயிற்சி மையத்திலிருந்து 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக வந்த தகவல், பல ஆயிரம் இளைஞர்களின் கடின உழைப்பை வீணாக்கியிருக்கிறது என, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.


மறுதேர்வு நடத்த வேண்டும் - அண்ணாமலை


தேர்வு முறைகேடு தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகளில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ஒரே பயிற்சி மையத்திலிருந்து 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக வந்த தகவல் பல ஆயிரம் இளைஞர்களின் கடின உழைப்பை வீணாக்கியிருக்கிறது. ஏற்கனவே நில அளவர் தேர்வில், காரைக்குடி மையத்திலிருந்து 700 பேர் வெற்றி பெற்ற நிகழ்வின் பின்னணியில் விசாரணை நடத்தவிருப்பதாக ஆணையம் தெரிவித்த நிலையில், தேர்வு நடந்து எட்டு மாத கால காத்திருப்புக்குப் பிறகு வெளிவந்துள்ள குரூப் 4 தேர்வு முடிவுகளிலும் முறைகேடுகள் என்பது, அரசுப் பணிக்காக அயராது உழைத்த தமிழக இளைஞர்களை அவமதிப்பது போலாகும். உடனடியாக, தமிழக அரசு தீவிர விசாரணை நடத்தி, தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருந்தால், மறு தேர்வு நடத்த முன்வர வேண்டும் என்றும், அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் பல்லாயிரம் இளைஞர்களுக்கான வாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.


சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்:


”அண்மையில் வெளியான குரூப்-4 தேர்வு முடிவில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 700க்கும் மேற்பட்டோரும், தென்காசியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தைச் சேர்ந்த 2000 பேரும் தேர்ச்சி அடைந்திருப்பதால், முறைகேடு நடந்து இருப்பதாக” எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். 


அமைச்சர் விளக்கம்:


அதற்கு பதில் அளித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,  "குரூப் 4 நில அளவர் தேர்வு முறைகேடு என்ற புகார் எழுந்தவுடனேயே அது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேடு ஏதும் நடந்துள்ளதா என்பது பற்றி மனித வள மேம்பாட்டுத்துறைச் செயலரின் வாயிலாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது” என கூறினார். இந்நிலையில் தான், குரூப்-4 தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக, உரிய விசாரணை நடத்த வேண்டும் என அண்ணாமலையும் வலியுறுத்தியுள்ளார்.


தனியார் நிறுவனம் விளக்கம்:


தென்காசியைச் சேர்ந்த குறிப்பிட்ட நிறுவனம் தமிழகம் முழுவதும் 40-க்கும் அதிகமான கிளைகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த ஒரு நிறுவனத்திலிருந்து, அதிக அளவில் தேர்வர்கள் எவ்வாறு தேர்ச்சி அடைந்தார்கள் என்கிற சந்தேகம், தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தங்கள் மையத்திலிருந்து 2000 பேர் தேர்வானது உண்மைதான் என்றும், தேர்வானவர்களின் பட்டியலை அளிக்க தயாராக உள்ளதாகவும், அந்த பயிற்சி மையத்தின் நிர்வாகி தெரிவித்துள்ளார்.