சென்னையில் தீபாவளி பண்டிகை கழிவுகளை அகற்ற 20 ஆயிரம் பணியாளர்களை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. 


நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று (நவம்பர் 12) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டிலும் இப்பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடை அணிந்து, இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் பட்டாசுகள் இல்லாத தீபாவளி பண்டிகை ஏது என்பது போல அதிகாலை முதல் இரவு வரை விதவிதமாக பட்டாசுகளை வெடிக்க விட்டு இந்த நாளை உற்சாகமாக கொண்டாடினர். 


தமிழ்நாட்டில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரங்கள் பட்டாசு வெடிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. தடையை மீறி பட்டாசு வெடிப்பவர்களை போலீசார் கண்காணித்து வழக்குப்பதிவு செய்தனர். சென்னையில் மட்டும் 140 இடங்களில் தீபாவளி பண்டிகையை பட்டாசு வெடித்ததால் தீ விபத்தும் ஏற்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் என்ன என்ன புது ரக பட்டாசுகள் சந்தையில் விற்கப்படுகிறது என்பதை பார்த்து பார்த்து பட்டாசு பிரியர்கள் வாங்குவது வழக்கம். 


அதேசமயம் பட்டாசின் குப்பைகள், பட்டாசு வைக்கப்பட்ட அட்டைப்பெட்டிகள் என கழிவுகள் தெருக்களில் குவிந்துள்ளது. இன்று (நவம்பர் 13) பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளதால், பட்டாசு வெடிப்பது தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் பட்டாசு கழிவுகளால் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் இதனை உடனுக்குடன் அப்புறப்படுத்த அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் துரிதமாக செயல்பட தொடங்கியுள்ளது. 


அந்த வகையில் சென்னையில் மட்டும் தீபாவளி பண்டிகை கழிவுகளை அகற்ற 20 ஆயிரம் பணியாளர்களை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் பட்டாசு கழிவுகளை சேகரிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் கழிவுகளை கொண்டு செல்ல ஏதுவாக மண்டலத்துக்கு 2 வாகங்கள் என 30 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நேற்று இரவு முதலே தூய்மை பணியாளர்கள் பட்டாசு கழிவுகளை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 


சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள கழிவு மையத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டுகிறது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் மட்டும் சுமார் 63.76 டன், அதற்கு மறுநாள் 39.4 டன் பட்டாசு கழிவுகள் சேகரித்து அப்புறப்படுத்தப்பட்டது. சென்னையில் நாள்தோறும் சுமார் 5 டன் கழிவுகள் சேகரிப்பட்டு அப்புறப்படுத்தப்படும் நிலையில் பட்டாசு கழிவுகளை தனியாக சேகரித்து வழங்க பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.