பரபரப்பான அரசியல் சூழலில் இன்று காலை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு சென்று தேசிய தலைவர் ஜே.பி நட்டா மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார். 


நாடே எதிர்நோக்கும் நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகள் தரப்பில் தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க இந்த முறையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. அதே சமயம் பா.ஜ.க ஆட்சி அமைக்கக்கூடாது என எதிர்க்கட்சிகள் தரப்பில் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இதற்கிடையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். ’எண் மண், எண் மக்கள்’ என்ற பெயரில் இந்த நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். சென்னையில் வருகின்ற 11 ஆம் தேதி நடைபயணம் மேற்கொள்கிறார், இதில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா கலந்துகொள்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 25 ஆம் தேதி நடைபயண நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்துக்கொண்டு உரையாற்றுகிறார்.


அண்ணாமலை தனது நடைபயணத்துக்கு மத்தியிலும் தமிழகத்தில் பா.ஜனதா தலைமையில் வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அண்ணாமலைக்கு மேலிடத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநில தலைவர் அண்ணாமலைக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதன் பேரில் அண்ணாமலை இன்று காலை டெல்லி புறப்பட்டு செல்கிறார். பின் மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் தேசிய தலைவர் ஜே.பி நட்டாவை சந்தித்து பேசுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தேசிய தலைவர் ஜே.பி நட்டாவை அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் 14 பேரும், காங்கிரஸை சேர்ந்த ஒருவரும் சந்தித்து பாஜகவில் இணைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



  1. திரு.கு.வடிவேல் - கரூர்

  2. திரு.P.S. கந்தசாமி - அரவக்குறிச்சி

  3. திருமதி. கோமதி சீனிவாசன் (முன்னாள் அமைச்சர்) - வலங்கைமான்

  4. திரு.R.சின்னசாமி -சிங்காநல்லூர்

  5. திரு R. துரைசாமி (எ) சேலஞ்சர் துரை -கோயம்புத்தூர்

  6. திரு.M.V.ரத்தினம் - பொள்ளாச்சி

  7. திரு S.M.வாசன் - வேடச்சந்தூர்

  8. திரு.S.முத்துகிருஷ்ணன் - கன்னியாகுமரி

  9. திரு.P.S. அருள் - புவனகிரி

  10. திரு.N.R.ராஜேந்திரன்

  11. திரு. R.தங்கராசு - ஆண்டிமடம்

  12. திரு.குருநாதன்

  13. திரு V.R. ஜெயராமன் - தேனி

  14. திரு.பாலசுப்ரமணியன் - சீர்காழிமற்றும்

  15. திரு.சந்திரசேகர் - சோழவந்தான்


இன்னும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் விரைவில் பா.ஜ.க வில் இணைவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜக உடன் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். மேலும், அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதனால் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அதிமுக உடன் பாமக மற்றும் தேமுதிக கூட்டணி அமைக்கும் என கூறப்படுகிறது. இப்படியான சூழலில் பாஜக கூட்டணியில் அதிமுக இணைய எப்போதுமே கதவுகள் திறக்கப்பட்டிருக்கும் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளது. அதுமட்டுமின்றி பாஜக கூட்டணியில், தேமுதிக 4 மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை இடத்தையும் கேட்பதாக கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.