தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஒரு புறம் வெயில் இருந்தாலும் ஒரு சில இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை 2 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
வெப்பஅலை எச்சரிக்கை: தமிழக உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 40.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து கரூர் பரமத்தியில் 40 டிகிரி செல்சியஸ், வேலூரில் – 39.3 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டையில் – 39.6 டிகிரி செல்சியஸ், தூத்துக்குடி – 39 டிகிரி செல்சியஸ், மதுரையில் – 38.8 டிகிரி செல்சியஸ், ஈரோடு – 38.8 டிகிரி செல்சியஸ், தர்மபுரியில் – 38.2 டிகிரி செல்சியஸ், சேலம் – 38.3 டிகிரி செல்சியஸ், தஞ்சாவூரில் – 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 38.5 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 37.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவானது. கடந்த ஓரிரு நாட்களாக 42 டிகிரி கடந்து பதிவான வெப்பநிலை நேற்று சற்று குறைந்து பதிவானது. மேலும் சென்னையில் ஒரு சில இடங்களில் மாலை நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் உஷ்ணம் சற்று தணிந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.
வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பகல் நேரங்களில் மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக முதியவர்கள், குழந்தைகளுக்கு அதிக வெப்பநிலை காரணமாக வெப்ப அழுத்தம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஒடிசாவில் மீண்டும் ரயில் விபத்து... நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் ஏறியதில் 4 பேர் உயிரிழப்பு..!