ஒடிசா ரயில் விபத்து மக்களை அதிர்ச்சி கலந்த சோகத்தில் ஆழத்தியது. 288 பேரின் உயிரை பலி வாங்கிய இந்த ரயில் விபத்து உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான ரயில் விபத்தாக இது கருதப்படுகிறது. இந்த ரயில் விபத்து ஏற்படுத்திய ரணமே ஆறாத நிலையில், தற்போது மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.


ஜாஜ்பூர் ரோடு ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலின் பெட்டியின் கீழ் மழையில் நனையாமல் இருப்பதற்காக தஞ்சம் புகுந்தவர்கள் மீது அந்த சரக்கு ரயில் ஏறியதில் நேற்று நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதுமட்டும் இன்றி, நான்கு பேர் காயமடைந்தனர். இந்த நிலையில், அந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.


நடந்தது என்ன?


ஒடிசாவின் ஜாஜ்பூர் ரோடு ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் ஒன்று எஞ்சினுடன் இணைக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது, அங்கு இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. இதையடுத்து, ரயில் பெட்டிகளுக்கு அடியில் தொழிலாளர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். அப்போது, இன்ஜின் இன்றி நின்று கொண்டிருந்த சரக்கு ரயில், திடீரென்று நகரத் தொடங்கியது. எதிர்பாராதவிதமாக ரயில் பெட்டிகள் நகர்ந்ததால் அதன் கீழே தஞ்சம் புகுந்த தொழிலாளர்கள் மீது ஏறியது. அப்போதுதான், இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்தது. கனமழை பெய்து கொண்டிருந்ததால் ரயில் பெட்டிகள் நகர்வதை தொழிலாளர்கள் கவனிக்கவில்லை. ரயில் பெட்டிகள் கீழே இருந்த அவர்கள் மீது ரயிலின் சக்கரம் ஏறியதில், அவர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 


இதுகுறித்து கிழக்கு கடற்கரை ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடந்த சில மாதங்களாக, இன்ஜின் இல்லாத பெட்டிகள் அந்த வழித்தடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. கனமழையின் போது பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மணல் மற்றும் கல் ஆகியவற்றைக் கொண்டு செல்லுவதற்கு இந்த சரக்கு ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்படுகிறது. 


சரக்கு ரயில் ஏறியதில் 7 பேர் உயிரிழப்பு:


விபத்தின்போது, சரக்கு ரயில் பெட்டிகள் எதிர்பாராதவிதமாக நகர்ந்தது. அப்போதுதான், இந்த விபத்து ஏற்பட்டது. புயலால் கவிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது" என்றார். ரயில்கள் தடம் புரள்வது தொடர் கதையாகி வரும் சூழலில், இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


முன்னதாக, பாலசோர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 2) மாலை பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டது. கொல்கத்தாவில் உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது.


அப்போது, ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையத்தில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அதே நேரத்தில், யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த ஹவுரா அதிவிரைவு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டதாகவும், அதே வழித்தடத்தில் வந்த சரக்கு ரயில் ஒன்று  மோதியதில் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய விபத்தாக உருவெடுத்தது.


ரயில் விபத்து ஏற்பட்ட பகுதிக்கு மிக அருகில் உள்ள பள்ளி ஒன்றில் தான் உயிரிழந்தோர் உடல்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதனை அடுத்து, பிணவறையில் வைக்கப்பட்ட உடல்கள் அடையாளம் காணப்பட்டு சம்பந்தப்பட்ட குடும்பத்தாரரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றது.