நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு முதல் பள்ளிகள் முறையாக இயங்கவில்லை. கடந்த ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்னதாக தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வுகள் பெரும்பாலும் நிறைவடைந்ததால் எந்த இடையூறும் ஏற்படவில்லை, மீதம் இருந்த ஒரு தேர்வு மட்டும் முறையான பாதுகாப்புடன் நடத்தப்பட்டது.
ஆனால், பள்ளிகள் கொரோனா தொற்று காரணமாக திறக்கப்படாமலே இருந்தது. இந்த நிலையில், கடந்தாண்டு இறுதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டது ஆனால், மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்த காரணத்தால், தமிழகத்தில் தற்போது பள்ளிகள், கல்லூரிகள் என எந்த கல்வி நிலையங்களும் இயங்கவில்லை.
வழக்கமாக மார்ச் மாதத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு பெறுவது வழக்கம். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக தற்போது வரை 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது,
“தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும். மாவட்டங்கள்தோறும் கொரோனா பாதிப்பு வெவ்வேறு விதமாக உள்ளது. எனவே, சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின்படி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இணையவழியில் கண்டிப்பாக நடைபெறாது. நிச்சயமாக நேரடியாகவே மாணவர்கள் தேர்வு எழுதும் வகையில் நடத்தப்படும். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்-அமைச்சர்கள், துணை முதல்வர்கள், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் இருந்து பள்ளிக் கல்வி முதன்மை செயலாளரும், நானும் பங்கேற்றோம். முதல்வர் அறிவுறுத்தியபடி பல்வேறு கருத்துக்களை நாங்கள் முன்வைத்துள்ளோம். அனைத்து மாநிலங்களும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட மாணவர்களளை மனதில் வைத்த பேசிய நிலையில், நாங்கள் மட்டும் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களை மனதில் வைத்துப் பேசினோம். அந்த கூட்டத்தில் பிளஸ் 2 தேர்வு தேதியை மாநில அரசே முடிவு செய்து கொள்வோம் என்றும் கூறினோம்.
கொரோனா பரவல் தடுப்பு பணியில் விரும்பும் ஆசிரியர்களை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும் என்றும், விருப்பம் இல்லாத ஆசிரியர்களை வற்புறுத்தக் கூடாது என்றும் கல்வித்துறை அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் மூலம் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
12-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிப்பது சுலபம். ஆனால், அவர்கள் உயர்கல்வியின்போது பல்கலைகழகங்களும், நீதிமன்றங்களும் அவர்களின் தேர்ச்சியை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவர்களது வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்பதாலே, அவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், விரைவில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.