கடந்த அதிமுக ஆட்சியில் பொதுவிநியோகத் திட்டத்திற்கு தேவையான பாமாயில், பருப்பு வகைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கான டெண்டர்களை பெரும்பாலும் கிறிஸ்டி நிறுவனம் மட்டுமே எடுப்பது வழக்கம். பொதுவிநியோக திட்ட பொருட்களுக்கான டெண்டர்களை கிறிஸ்டி நிறுவனத்திற்கு மட்டுமே கிடைப்பது என்பது எழுதப்படாத விதி எனவும் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கும் கிறிஸ்டி நிறுவனத்திற்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும் அறப்போர் இயக்கம் தொடர்ந்து குற்றச்சாட்டு வெளியிட்டு வந்தது. அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்



கடந்த மே மாதம் 5ஆம் தேதி துவரம் பருப்புகளை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை தமிழக அரசு வெளியிட்டது. இந்த டெண்டரில் கிறிஸ்டி நிறுவனத்தின் மற்றொரு நிறுவனமான Rasi Nutri Foods நிறுவனமும் கிறிஸ்டி நிறுவனத்திற்காக டெண்டர்களை எடுத்து வந்த Kendriya, Nacof நிறுவனங்கள் என மூன்று நிறுவனங்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த டெண்டரில் துவரம் பருப்பை கிலோ ஒன்றுக்கு 146.5 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய கிறிஸ்டி நிறுவனத்திற்கு டெண்டர் கிடைத்தது. ஒருகிலோ துவரம்பருப்பின் விலை வெளி சந்தையிலேயே நூறு ரூபாய்க்கும் குறைவாக கிடைக்கும் போது 146.5 ரூபாய்க்கு டெண்டர் விடப்படுவதில் முன்னாள் அமைச்சர் காமராஜ், சுதாதேவி ஐ.ஏ.எஸ், கிறிஸ்டி நிறுவனர் குமராசாமி உள்ளிட்டோருக்கு ஆதாயம் இருப்பதாக கூறி அறப்போர் இயக்கம் விமர்சனங்களை முன்வைத்து வந்தது. இந்த நிலையில் புதியதாக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பழைய டெண்டரை ரத்து செய்து பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வகையில் டெண்டர் விதிகளை மாற்றியமைத்து புதிய டெண்டரை அறிவித்தது. இதன் காரணமாக ஏற்கெனவே டெண்டரில் கலந்து கொண்ட நான்கு கிறிஸ்டி நிறுவனங்களையும் சேர்ந்து ஒன்பது நிறுவனங்கள் இந்த டெண்டரில் கலந்து கொண்டன. இதில் கலந்து கொண்ட 8 நிறுவனங்கள் துவரம்பருப்பை நூறு ரூபாய்க்கும் குறைவாக கொள்முதல் செய்து தருவதாக டெண்டர் கொடுத்துள்ளனர். கடந்த முறை ஒருகிலோ துவரம்பருப்பை 146.5 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய ஒப்பந்தம் பெற்ற அதே கிறிஸ்டியின் ராசி ஃபுட்ஸ் நிறுவனம் போட்டி உருவான சூழலில் ஒரு கிலோ துவரம்பருப்பை 87 ரூபாய்க்கு கொள்முதல் செய்து தர முன்வந்துள்ளது. அதாவது ஒப்பந்தத்தில் போட்டி உருவான நிலையில் சென்ற முறை கொடுத்த விலையை விட ரூபாய் 59.50 ரூபாய் வரை குறைவாக டெண்டர் கொடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.



இதனை மேற்கொள் காட்டி அறப்போர் இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில், கிறிஸ்டி நிறுவனங்கள் இதற்கு முன்பாக எடுத்த அனைத்து டெண்டர்களிலும் போட்டியே இல்லாமல் பல ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாட்டு மக்களிடம் கொள்ளை அடித்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும், கடந்த 5 வருடங்களாக ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் சப்ளை செய்வதில் கிறிஸ்டி நிறுவனங்கள்- சுதா தேவி - காமராஜ் கூட்டணி அடித்த கொள்ளைகள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட பகிரங்க கொள்ளைகளில் ஈடுபட்ட கிறிஸ்டி நிறுவனங்கள் உடனடியாக டெண்டர் எடுப்பதில் இருந்து நீக்கம் செய்யப்பட வேண்டும். இதற்கு துணையாக இருந்த சுதா தேவி மற்றும் காமராஜ் இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை செய்து கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.