தமிழ்நாட்டில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக பணியிடமாற்றம் செய்தும் பதவி உயர்வு அளித்தும் ஆணை பிறப்பித்திருக்கிறது தமிழக அரசு. அதில் குறிப்பாக, சென்னையின் முன்னாள் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், கரண் சின்ஹா, மேற்கு மண்டல ஐஜி அமல்ராஜ்,  வன்னிய பெருமாள், வருண்குமார் போன்றோர் இடம்பெற்றுள்ளனர்.


ஏ.கே.விஸ்வநாதன் ஐபிஎஸ்



தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்தபோது பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுத்து, குற்றங்கள் குறைய வழி செய்தவர், குற்றவாளிகளை பிடிக்கும் சாதாரண கான்ஸ்டபுளாக இருந்தாலும் கூட நேரில் அழைத்து, அவருக்கு சன்மானம் அளித்து பாராட்டி ஊக்கப்படுத்தியவர். சாமானியர் செய்யும் சமூக பொறுப்புணர்வு கொண்ட செயல்களை கூட அங்கீகரித்து வாழ்த்தியவர் என சென்னை மக்களிடையே நற்பெயர் எடுத்த விஸ்வநாதன் தான் தற்போது, சட்டம் ஒழுங்கில் தொடர்பில்லாத துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.


இவர் சென்னையில் காவல் ஆணையராக இருந்தபோது இண்டு, இடுக்கு என நகர் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தியது மிகப்பெரிய சாதனையாகவும், குற்றவாளிகளை பிடிக்க மிகப்பெரிய உதவியாகவும் இப்போது வரை இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வெகுவாக குறைய இந்த சிசிடிவி கேமராக்கள் பெரும்பங்காற்றி வருகின்றன. பொதுமக்கள் அணுக எளியமையானவராகவும், குற்றவாளிகளுக்கு கடுமையானவராகவும் இருக்கும் ஏகே.விஸ்வநாதனை சட்டம் ஒழுங்கில் முக்கிய பணியிடத்தில் அமர்த்தவேண்டும் என்பதுதான் பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.


அமல்ராஜ் ஐபிஎஸ்



கோவை காவல் ஆணையர், திருச்சி காவல் ஆணையர், மேற்கு மண்டல ஐஜி என பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த அமல்ராஜ், ஏடிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டு, சென்னை காவல்துறையின் செயலாக்க தலைமையிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், ஐஏஎஸ், ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஊக்க உரை கொடுப்பதில் வல்லவர். நேர்மையாளராக குற்றவாளிகளை தப்பவிட்டுவிடகூடாது என்பதில் கடுமை காட்டுபவராக அறியப்படும் அமல்ராஜ்,  வெற்றித் தரும் மேலாண்மை பண்புகள், வெற்றியாளரின் வெற்றிப் படிகள், வெல்ல நினைத்தால் வெல்லலாம் போன்ற சுய முன்னேற்ற நூல்களையும் எழுதியுள்ளார்.


கரண்சின்ஹா ஐபிஎஸ்



ஆர்.கே.நகர் தேர்தல் சமயத்தில், சென்னை மாநகர காவல் ஆணையராக கரண் சின்ஷா பொறுப்பேற்றது முதலே காவலர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டவர், நீண்ட நாட்களாக பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்தவர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வழிவகை செய்தவர். குறிப்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணிக்கு பெண் போலீசாரை அமர்த்திவிட்டு, அங்கு இருந்த ஆண் காவலர்களை நகரத்தின் பாதுகாப்பு பணிக்கு அனுப்பியது வரவேற்புக்குள்ளானது.  குற்றங்களை குறைப்பதற்கு தீவிரமாக செயல்பட்டு, பல ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் போட்டு அவர்களை கைது செய்து வந்த நிலையில்,  திடீரென சீருடை பணியாளர் தேர்வாணயத்திர்கு மாற்றப்பட்டு, ஏகே விஸ்வநாதன் சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அதன்பிற்கு மதுவிலக்கு அமலாக்க பிரிவு சிறப்பு டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.  இந்நிலையில் தீயணைப்புத் துறை டிஜிபியாக அவரை தமிழக அரசு தற்போது நியமித்துள்ளது.


வன்னிய பெருமாள் ஐ.பி.எஸ்



குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த வலுவான விவாதம் எழுந்திருக்கும் நிலையில், இந்த துறைக்கான ஏடிஜிபியாக வன்னிய பெருமாள் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  தென்காசி மாவட்டம் புளியங்குடியை பூர்வீகமாக கொண்ட இவர்.  ஆரம்ப காலக்கட்டத்தில் தஞ்சை, மன்னார்குடி பகுதிகளில் ASP ஆக பணியாற்றியவர். தென் மாவட்டங்களில் குறிப்பாக கடையநல்லூர் பகுதிகளில் சாதிய கலவரங்கள் ஏற்பட்டு வந்த நிலையில், அதனை இவர் சிறப்பாக கையாண்டதால் சங்கரன்கோவில் ASP ஆக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு, நெல்லை துணை ஆணையர், கன்னியாகுமரி, தேனி மாவட்ட எஸ்.பி, திண்டுக்கல், விழுப்புரம் சரக டிஐஜி, சேலம், திருச்சி காவல் ஆணையர், மத்திய, மேற்கு மண்டல ஐஜி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றியவர். அதேபோல், சென்னையில் உள்ள மாநில குற்ற ஆவண காப்பகத்திலும் ஐஜியாக பணியாற்றியுள்ள வன்னியபெருமாள், 2009 ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கான குடியரசுத் தலைவர் விருதையும் பெற்றுள்ளார்.


வருண்குமார் ஐபிஎஸ்



இந்த லிஸ்டில் வந்துள்ள ஒரே எஸ்.பி வருண்குமார். திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அகில இந்திய அளவில் UPSC தேர்வில் 3ஆம் இடம் பிடித்து, தமிழகத்தில் அருப்புக்கோட்டையில் ASP-யாக பணியாற்றியபோதே கவனிக்கப்பட்ட நபர். பின்னர், கமான்டோ Force ASP, Civil Supplies SP CID என்ற பொறுப்புகளுக்கு பிறகு 2019ல் ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டார். அங்கு சென்றதில் இருந்தே, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் அடுத்தடுத்த கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். குறிப்பாக பேஸ்புக்,  இன்ஸ்டா, ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி குற்றங்களில் ஈடுபடுவோரையும், பெண்களுக்கு எதிராக செயல்பட்ட நபர்களையும் கண்டறிந்து, அவர்களை கைது செய்தது பெருமளவில் பாராட்டப்பட்டது.


ராமநாதபுரம் – இலங்கை இடையே நடைபெற்ற மிகப்பெரிய அளவிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்தது, ரவுடிகள் சாம்ராஜ்ஜியத்தை ஒழித்தது என பொதுமக்களிடையே நற்பெயரை எடுத்து வந்த வருண்குமார், அருண்குமார் என்பவரது கொலை வழக்கில் மதரீதியிலான அரசியல் செய்யப்பட்டதால் அன்றைய அதிமுக அரசு அவரை சென்னைக்கு பணியிடமாற்றம் செய்தது. தற்போது அவரை தமிழக அரசு திருவள்ளூர் மாவட்ட எஸ்.பியாக நியமித்துள்ளது. இவர் திருமணம் செய்திருப்பதும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியைதான். 2016 தேர்தலில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட கரூர் அன்புநாதன் வீட்டில் ரெய்டு செய்து, 360 கோடி ரூபாய் கொண்டு செல்லப்பட்ட கண்டெய்னரை நள்ளிரவில் துரத்தி பிடித்து, அதனால், கொலை முயற்சி வரை நடந்து பணியிடமாற்றம் செய்யப்பட்ட வந்ததிதா பாண்டேதான் அவர்.