12 மணி நேர பணி மசோதா:  அரசியல் கட்சிகளின் எதிர்ப்பிகளுக்கிடையே 12 மணி நேர வேலை மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தொழில் நிறுவனங்களில் 12 மணி நேர வேலை மசோதாவுக்கு சட்டப்பேரவையில் காங்கிரஸ், மதிமுக,சி.பி.எம்., விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன.


12 மணி நேர பணி மசோதா - கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு


தமிழ்நாடு சட்டப்பேரவையில் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற வழி செய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. 12 மணி நேர பணி மசோதாவிற்கு கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். 


காங்கிரஸ் 


”மத்திய அரசு கொண்டு வந்த சட்ட மசோதாவை தமிழக அரசு சட்டமுன்முடிவாக எடுக்க கூடாது. இது தொழிலாளர்களுக்கு எதிரானது.” என காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி


சட்டமன்ற தேர்வு குழுவுக்கு சட்டமசோதாவை அனுப்ப வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராமச்சந்திரன் வலியுறுத்தி உள்ளார். தொழிலாளர் உரிமையை பறிக்கும் சட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.


“கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவான சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியிருக்கிறது. தொழிற்சங்க உரிமையை நசுக்கும் சட்டம் பற்றி காலையிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து பேசினோம். அவர் உறுதியளித்த பின்னரும் நிறைவேற்றப்பட்டுள்ளது.” என்று சி.பி.எம்.  எம்.எல்.ஏ. நாகை மாலி தெரிவித்துள்ளார்.


 “நூற்றாண்டு காலமாக போராடி பெற்ற சம்பள உயர்வு, நிரந்தர வேலை எல்லாவற்றையும் நீர்த்துப் போகும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதை எதிர்த்து வெளிநடப்பு செய்தோம்.” என்று சி.பி.ஐ. எம்.எல்.ஏ. தளி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்


இந்த மசோதா தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்   இது ஒரு மோசமான சட்டம் என்பது தெரிந்தும்,  அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் ஏன் இந்த சட்ட முன்வடிவை கொண்டு வர வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளார். . மே தினக் கொண்டாட்டத்தை முதன் முதலில் கொண்டு வந்த மாநிலம் தமிழ்நாடு என்றும், இப்படி ஒரு சூழலில் 12 மணி நேர சட்டத்தை ஏற்கவே முடியாது. இதுவன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.


விடுதலை சிறுத்தைகள் கட்சி 


 “ஆலை முதலாளிகளுக்கான சட்டமாக இது உள்ளது. அனைத்து கூட்டணிக் கட்சிகளும் எதிர்த்து குரல் கொடுத்தோம். யார் மீதும் திணிக்கப்படாது என்கிறார்கள். ஆனால், இது உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுக்கும்.” என விசிக உறுப்பினர் சிந்தனைசெல்வன் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.


12 மணி நேர பணி மசோதா - அமைச்சர்கள் விளக்கம்


இந்த மசோதா குறித்து அமைச்சர்கள் சி.வி.கணேசன், தென்னம் தங்கரசு விளக்கம் அளித்துள்ளனர்.


தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை  அமைச்சர் கணேசன், "இது தொழிலாளர்கள் விரோத சட்டதிருத்தம் அல்ல. எந்த ஒரு தொழிலாளரின் விருப்பத்திற்கு மாறாகவோ, எதிராகவோ கொண்டு வரக்கூடிய சட்ட திருத்தம் அல்ல. வாரத்திற்கு 48 மணி நேரம் மட்டுமே இந்த பணி நேரம் நீடிக்கும்.  இருக்கின்ற வரையறைகள் மற்றும் நடைமுறைகளில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது. விரும்புகின்ற நிறுவனங்களில் மட்டுமே அமல். அனைத்து நிறுவனங்களிலும் கொண்டு வரப்படாது. கட்டாயப்படுத்தி நடைமுறைப்படுத்த முடியாது" என்றார்.


தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில்.” மின்னணுவியல் துறை, தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி, மென்பொருள் துறையில் பணியாற்றக் கூடியவர்களுக்கு 12 மணி நேர வேலை மசோதா பொருந்தும் வாய்ப்புள்ளது. வாரத்தில் இருக்கின்ற ஒட்டுமொத்த வேலை மணி நேரங்கள் என்பது மாறாது. இந்த மசோதாவின்படி வேலை செய்பவர்கள், 4 நாட்கள் வேலை செய்துவிட்டு 3 நாட்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். அந்நாட்களில் வேறு பணிகளையும் அவர்கள் பார்க்கலாம்.” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.