முதல்வர் ஸ்டாலினின் 100 ஆட்சி என்பது இன்றைக்கானது அல்ல... நாளைக்கானது என்கிற ரீதியில் தனது கருத்துக்களை தெரிவிக்கிறார் மதுரையை சேர்ந்த ஊடகவியலாளர் தன்ராஜ். இதோ அவரது கருத்து...




 


முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் என்று சொல்லி தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின்  பொறுப்பேற்று இன்றுடன் 100 நாள் ஆகி விட்டது. கொரோனா இரண்டாவது அலை உருவான நேரத்தில் பதவியேற்ற மு.க. ஸ்டாலின் ஒரு நீண்ட, கடினமான பயணத்தை தொடங்கினார்.  மிக நெருக்கடியான சூழலில் கட்சியை வழிநடத்திய பொறுமையும் துணை முதல்வராக இருந்த அனுபவமும் அவரது புதிய பதவிக்கு உதவியது. கிட்டத்தட்ட 55 ஆண்டுகளுக்கு முன்பே சென்னை கோபாலபுரத்தில்  இளைஞர்களை ஒருங்கிணைத்து நிகழ்ச்சிகளை நடத்தியவர்.  தி.மு.கவின் தலைவராகவும், முதலமைச்சராகவும் உயர்ந்திருக்கும் மு.க. ஸ்டாலினின் பயணம் மிக நீளமானது, கடினமானது என்பதை அவரது அரசியல் எதிரிகள்கூட ஒப்புக்கொள்வார்கள்.


அத்துடன் மு.க.ஸ்டாலின் சென்னையின் மேயராகவும், தமிழ்நாட்டின் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்தபோது அவரது செயல்பாடுகள் பல மட்டங்களிலும் கவனிப்பையும் பாராட்டுதல்களையும் பெற்றன. கடந்த 2016ல்  தி.மு.க. தலைவரும், அவரது தந்தையுமான கலைஞர் கருணாநிதி உடல்நலம் குன்றிய பிறகு, கட்சியின் பொறுப்பை மு.க. ஸ்டாலின் கையில் எடுத்துக்கொண்டார்.




2018ம் ஆண்டு ஆக 7 ந் தேதி கருணாநிதி மறைந்த பிறகு, தி.மு.கவின் முழு நேர தலைவராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றார். 2019ஆம் ஆண்டு பாராளு மன்ற தேர்தலை  மனதில் கொண்டு கட்சியின் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினார்.  அந்த பொதுத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 39 இடங்களில் போட்டியிட்டு 38 இடங்களைக் கைப்பற்றியது.


அதன் பிறகும் ஸ்டாலின் முதல்வர் ஆக மாட்டார். அவருக்கு ராசி இல்லை. கட்டம் சரி இல்லை என்று எதிரிகள் ஆரூடம் கூறினார்கள். அப்போதய அ.தி.மு.க. அமைச்சர் ஒருவர் " கலைஞரின் மூளை மு.க. அழகிரியிடம் தான் இருக்கிறது. ஸ்டாலினிடம் அது இல்லை" என்று சிண்டு மூட்டி விட்டார்.  அப்படி என்றால் ஜெயலலிதாவின் திறமை அதிமுகவில் யாரிடம் இருக்கிறது? என்று  திருப்பிக்கேட்டால் அந்த அமைச்சரிடம் பதில் இருக்காது.


இப்படி பலர் கேலி செய்வதை  ஸ்டாலின் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கலைஞரை போல் பேச்சுத்திறமை, எழுத்து திறமை இல்லை என்றாலும் அவரைப்போல் உழைக்கும் திறமை தன்னிடம் உள்ளதாக தெரிவித்தார். அதனால் தான் ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு என்று கருணாநிதி குறிப்பிட்டார். அந்த உழைப்பும் வீண் போகவில்லை.


 கடந்த சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்து ஸ்டாலின் முதல்வரானார்.  தேர்தல் காலங்களில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் அரசு டவுன் பஸ்களில் பெண்கள் பயணம் செய்ய இலவசம் என்ற அறிவிப்பு உள்பட சில வாக்குறுதிகளை பதவி ஏற்ற அன்று அறிவித்தார். மேலும் ரேசன் கார்டுகளுக்கு கொரோனா நிதியாக ₹ 4 ஆயிரம், 13 வகையான மளிகை பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டன. இப்போது பெட்ரோலுக்கு ரூ.3 குறைத்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் தி.மு.க அரசு தெரிவித்துள்ளது. 


திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக போராட்டம் நடத்தியது. திமுக தேர்தல் வாக்குறுதி ஒன்றில் "ஊழல் செய்த அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு தொடர்ந்து தனி நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தப்படும்" என்பதாகும். இது தெரியாமல் அதிமுகவினர் போராட்டம் நடத்தி விட்டார்களோ என்னவோ... இந்த போராட்டத்துக்கு பிறகு முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர் விஜய பாஸ்கர் அவரை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். 




இது ஒரு புறம் இருக்க திமுக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் அரசை மு.க.ஸ்டாலின் மிக கவனமாக கொண்டு செல்கிறார். தனது கட்சிக்காரர்களால் ஏதும் கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்று கண்ணில் எண்ணை ஊற்றிய படி கண்காணிக்கிறார். அப்படி ஏதாவது சிறு தவறு செய்தால் கூட அவர்களை கட்சியில் இருந்து நீக்கி விடுகிறார். 


ஆட்சியின் தொடக்கமே நன்றாக இருக்க வேண்டும் என்று கருதிய ஸ்டாலின் தலைமைச் செயலாளராக இறையன்பு, தனிச்செயலாளராக உதய சந்திரன் போன்றோரை நியமித்தார். அத்துடன் தமிழக காவல் துறை இயக்குனராக சைலேந்திர பாபுவை பணி அமர்த்தினார். இப்படி ஆட்சியின் தொடக்கம் நன்றாக இருக்க வேண்டும் நினைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 ஆண்டு காலம் நிறைவு செய்யும்போது தங்களுக்கு மன நிறைவை தருவார் என்று மக்கள் எதிர் பார்க்கிறார்கள். அப்போது தான் கலைஞர் நினைவு நாளில் ஸ்டாலின் சொன்னது போல் அடுத்தும் திமுக ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்....


-மூத்த செய்தியாளர் தன்ராஜ், மதுரை.