தமிழகம் மற்றும் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற முக்கிய அரசியல் - சமூக நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
1. தமிழகத்தில் கோவிட் - 19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாளை மறுநாள் முதல் 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
2. சென்னையில் மெட்ரோ ரயில் சேவையும் மே 10-ஆம் தேதி அதிகாலை 4 மணிமுதல் ரத்து செய்யப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
3. அருணாச்சல பிரதேச மாநிலத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த இரவு நேர ஊரடங்கு மே மாதம் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. கோவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் நாட்டின் எந்தவொரு நகரத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு ஆக்சிஜன் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் தேசிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது. மேலும், கொரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்க பரிசோதனை சான்று கட்டாயம் இல்லை என்றும், முகவரி மற்றும் அடையாளச்சான்றும் வழங்கத் தேவையில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
5. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மகாராஷ்ட்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, மத்தியபிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆலோசனை நடத்தினார்.
6. சென்னை மாநகர காவல் ஆணையராக சங்கர்ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு டிஜிபியாக தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டார். உளவுத்துறை ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
7. டெல்லியில் தடுப்பூசி பணிகளை 3 மாத காலத்திற்குள் முடிக்க 2 கோடியே 60 லட்சத்திற்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் தேவைப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
8. திரவ மருத்துவ ஆக்சிஜனை எடுத்து செல்லும் டேங்கர்கள் மற்றும் கொள்கலன்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் தடையின்றி முன்னேறுவதை உறுதி செய்வதற்காக, சுங்கச்சாவடிகளில் அவ்வகையான வாகனங்கள் செலுத்தவேண்டிய கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
9. 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் மே 11-ஆம் தேதி, சென்னை கலைவாணர் அரங்கத்தில் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பேரவை முன்னவராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
10. கோவிட்19 காலத்தில் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்பு, கல்விக்கட்டணம், 12-ஆம் வகுப்பு தேர்வு நடத்துவது ஆகியவை குறித்து வரும் நாளை ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.