சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் " அண்ணாத்த". இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இது  படம் ரஜினியின் 166 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணாத்த கிராமத்துக்கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் படத்தில் ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ளனர். முத்து படத்திற்கு பிறகு ரஜினியுடன் அதிக நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் படம்  " அண்ணாத்த " என கூறப்படுகிறது. படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்கிறார், முன்னணி நடிகை  தங்கையாக நடிப்பதால் படம் நிச்சயம் அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்டது என்பதில் சந்தேகமில்லை.





மேலும் நயந்தாரா ரஜினிக்கு ஜோடியாக இணைந்துள்ளார், 90 களில் ரஜினியுடன் ஜோடிப்போட்ட குஷ்புவும் , மீனாவும் ரஜினியின் முறை பெண்களாக வலம் வருகிறார்களாம்.  வில்லனாக  தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு நடித்துள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ், லிவிங்ஸ்டன், சூரி, சதீஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் படத்தில் இடம் பெற்றுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டு வருகிறது. கொரோனா சூழல் காரணமாக படத்தை விரைந்து முடித்து தர வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் கேட்டுக்கொண்டதால், ரஜினி ஐதராபாத்தில் தங்கி  படத்தில் நடித்து வருகிறார்.





இந்நிலையில்  படத்தில் ரஜினியின் பாகம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதால் , அவர் மீண்டும் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  "அண்ணாத்த" டப்பிங் முடித்த பிறகு  இந்த மாத இறுதியில் அவர் சிறுநீரக பரிசோதனைக்காக‌ அமெரிக்கா செல்ல உள்ளார். ஏற்கனவே ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவில் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.





இந்நிலையில் ரஜினியின் அடுத்தபடத்தை யாரோ இளம் இயக்குநர் ஒருவருக்கு கொடுக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரஜினி அடுத்தடுத்து  இரண்டு படங்களில்  நடிக்க போவதாக அவருக்கு நெருக்கமானவர்களிடம்  பகிர்ந்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஜினியின் 166 வது படமான "அண்ணாத்த" இந்த வருடம்  தீபாவளி அன்று திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குள்ளாக படத்தை முடித்து விட வேண்டும் என  முழு முயற்சியில் இறங்கியுள்ளது படக்குழு.