ஏப்ரலில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத்தேர்தலையொட்டி திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கான அறிவிப்புகள் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன. குறிப்பாகக் குழந்தைகள் பாதுகாப்புக்காகத் தனித்துறை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பவை பின்வருமாறு:




”அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் தற்காப்புப் பயிற்சி கட்டாயப்பாடம். போக்சோ சட்ட அமலாக்கத்தைக் கண்காணிப்பதற்கு என்று மாவட்ட அளவில் தனி அமைப்புகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தை உரிமைப் பாதுகாப்பு அமைப்புகள் மாநில மற்றும் மாவட்ட அளவுகளில் இயங்குகின்றன, இதில் குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பில் நிபுணத்துவம் பெற்றவர்கள் மட்டுமே நியமிக்கப்பட வலியுறுத்தப்படும். குழந்தைகள் மீது தொடர்ந்து வன்முறைகள் அதிகரித்துக் கொண்டு வருவதால், குழந்தைகள் பாதுகாப்புக்கு என்று தனித் துறை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தனி அந்தஸ்து மற்றும் முழுக்கட்டமைப்புகள் கொண்ட அமைப்பாக இயங்க வழிவகை செய்யப்படும்.


அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகள் மீது நடக்கும் பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கு என்று சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகள் மீது நடக்கும் பாலியல் வன்முறை மற்றும் பிற வன்முறைகளைத் தடுப்பதற்கு, குழந்தை உரிமைக் கல்வி, பாலினச் சமத்துவம், பாலின நீதி மற்றும் வாழ்க்கைத் திறன் கல்வி போன்றவை அனைத்துப் பள்ளிகளிலும், இருபாலினக் குழந்தைகளுக்கும் நடைமுறைப்படுத்த வழிவகை செய்யப்படும். அனைத்துப் பள்ளிகளிலும் முழு நேர மன நல ஆலோசகர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்”


இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.