பொள்ளாச்சி பாலியல் வன்குற்ற விவகாரத்தில் விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ., குற்றத்தை மறைத்த பொள்ளாச்சி காவல்துறையை விசாரிப்பதைத் தவிர்ப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் கடந்த ஜனவரியில் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரின் மகன் உட்பட மூன்று பேரை சி.பி.ஐ. கைது செய்தது. இதையடுத்து அந்த அ.தி.மு.க. பிரமுகர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். தேர்தல் நேரத்தில் பாரதிய ஜனதாவுடனான கூட்டணிக்கு அ.தி.மு.க. படியாததுதான் இந்த கைதுக்குக் காரணம் என ஒருபக்கம் விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில் பாரதிய ஜனதாவுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்த அதே சமயம் தேர்தல் நேரத்தைக் கருத்தில் கொண்டு குற்றவிசாரணையும் கிடப்பில் வைக்கப்பட்டது. 2019 ம் மார்ச் மாதம் நக்கீரன் இதழ் இந்தக் குற்றம் குறித்த காணொளியை வெளியிட்டது. அதில் பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அ.தி.மு.க. பிரமுகரின் மகன் தொடர்ச்சியாக இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக வீடியோ ஆதாரத்துடன் புகார்களை முன்வைத்திருந்தனர். அந்த வீடியோ நாடெங்கிலும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. காவல்துறை நக்கீரனின் இந்தக் குற்றச்சாட்டை மறுத்திருந்தது. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டது, குற்றவாளிகளின் பெயரை வெளியிட மறுத்தது எனப் பொள்ளாச்சி காவல்துறையின் மீது பொதுமக்களும் இயக்கங்களும் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்திருந்தன.
வீடியோ வெளியான அடுத்த நாளே விசாரணை காவல்துறையிடமிருந்து சி.பி.ஐ. தரப்புக்கு மாற்றப்பட்டது. குற்ற விசாரணையில் குற்றவாளிகள் உபயோகித்தக் கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருந்தாலும் இன்றுவரை இதில் வழக்கை மூடிமறைக்க உதவியாக இருந்த காவல்துறையிடம் எந்தவிதமான விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிகிறது.