உத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் வன்முறை சம்பவங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்களுடைய வீடுகளை மாவட்ட நிர்வாகம் இடித்து தள்ளுவது தொடர் கதையாகி வருகிறது.
குறிப்பாக, இதில் இஸ்லாமிய சமூகத்தவரே பெரிதும் பாதிக்கப்பட்டுவதாக புகார் எழுந்துள்ளது. சட்ட விரோதமாக வீடு கட்டப்பட்டிருப்பதாகக் கூறி, வீடுகள் இடிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக, உத்தரப் பிரதேச அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், "கட்டிடங்கள் இடிக்கப்படுவது சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும். பழவாங்கும் நடவடிக்கையாக இருக்க கூடாது" என கருத்து தெரிவித்துள்ளது.
இருந்த போதிலும், கட்டிடங்களை இடிக்க உத்தரப் பிரதேச அரசிற்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. இதுகுறித்து பேசிய நீதிமன்றம், "கட்டிடங்கள் இடிக்கப்படுவதற்கு தடை விதிக்க முடியாது. சட்டத்திற்கு உட்பட்ட நடக்க வேண்டும் என்பதை சொல்ல மட்டும்தான் முடியும்" என தெரிவித்தது.
வீடுகள் சட்ட விரோதமாக இடிக்கப்படுவதாகவும் இதற்கு காரணமான அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் ஜாமிய உலாமா இந்த் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
விதிகளை பின்பற்றாமல் எந்த ஒரு கட்டிடமும் இடிக்கக் கூடாது என்பதை உத்தரப் பிரதேச அரசு உறுதி செய்யக் கோரி உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
முகமது நபி குறித்து சர்ச்சைகுரிய கருத்து தெரிவித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப் பிரதேசத்தில் போராட்டம் நடைபெற்றது. இதில் வன்முறையில் ஈடுபட்டவர்களாக குற்றம்சாட்டப்படும் நபர்களின் வீடுகளை உத்தரப் பிரதேச அரசு இடித்து வருகிறது.
இம்மாதிரியான இடிப்பு சம்பவங்கள் அதிர்ச்சியை அளித்துள்ளதாகவும் வீடுகள் இடிக்கப்பட்ட பிறகே, நோட்டீஸ் அளிக்கப்பட்டதாகவும் மனுதாரர்கள் கூறியிருந்தனர்.
விதிகளை பின்பற்றியே வீடுகள் இடிக்கப்பட்டதாக உத்தரப் பிரதேச அரசு விளக்கம் அளித்தது.