’மைதானம் இல்லை, வயல் இருந்தது’ கால்பந்தாட்டத்தில் சாதனைப் படைக்கும் அரசு பள்ளி மாணவிகள்..!

வயல்களையே மைதானம் ஆக்கி, பயிற்சி பெற்று மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி வாகை சூடும் அரசு பள்ளி மாணவர்கள், அரசு மைதானம் அமைத்துக் கொடுத்தால் ஆல் இந்தியா போட்டிகளில் தமிழ்நாடு ‘கப்’ அடிப்பது உறுதி !

Continues below advertisement
விளையாட்டு மைதானம் இல்லாத நிலையிலும், வயல், தரிசு நிலங்களில் ஓடி ஆடி கால்பந்தாட்ட பயிற்சி பெற்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் தேசிய அளவிலான கால்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்று தங்களை முதன்மை படுத்தி வருகின்றனர் திருவாரூர் மாவட்ட அரசு பள்ளி  மாணவிகள். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சவளக்காரன் என்ற ஊரில் அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நாலநல்லூர், ராமாபுரம், குடிதாங்கிசேரி, கோரையாறு உள்ளிட்ட கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர். விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள் மட்டுமே படிக்கும் இந்த பள்ளி மாணவர்கள் தற்போது தேசிய அளவில் கால்பந்தாட்ட போட்டிகளில் சாத்தித்து வருகின்றனர்.
 
விளையாட்டில் சாதிக்க ஆர்வம் மட்டுமே இருந்தால் போதும், எந்த தடைகளையும் தாண்டி சாதிக்க முடியும் என கடந்த பல ஆண்டுகளாக நிரூபித்து வருகின்றனர் இப்பள்ளி மாணவர்கள். 550 மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளிக்கு விளையாட்டு மைதானம் கிடையாது. பள்ளியின் அருகே உள்ள தரிசு நிலங்களும், வயல்பகுதிகளும் தான் அவர்களின் பயிற்சி களம்.  ஆனால், வயலில் சாகுபடி செய்யப்படும் நேரத்தில் இவர்கள் பயிற்சி செய்யவோ, கால் பந்தாடவோ இங்கு இடமே இருக்காது. அதோடு, இந்த பள்ளிக்கு நிரந்தரமான உடற்பயிற்சி ஆசிரியரும் கிடையாது. தொகுப்பு ஊதியத்தில் பகுதி நேரமாக உடற்கல்வி ஆசிரியர் முத்துகுமார் என்பவரை நியமித்துள்ளது கல்வித்துறை. இருந்தாலும், இந்த பள்ளி மாணவர்கள் கால்பந்தாட்ட போட்டியில் தனிக்கவனம் செலுத்தி பயிற்சி மேற்கொண்டதால் மகாராஷ்டிரா, ஜார்கண்ட், டெல்லி, ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சென்று விளையாடி பரிசுகளை வென்றுள்ளனர்
மேலும் இந்த பள்ளி மாணவர்கள் தமிழக கல்பந்தாட்ட அணியிலும் இடம் பெற்று சிறப்பாக விளையாடி வருகின்றனர். கடந்த 2014 ம் ஆண்டு பிரியதர்ஷினி என்ற மாணவி தமிழக அணியில் விளையாடி வெங்கலபதக்கம் பெற்றார்.  இந்த மாணவி  தமிழக  கால்பந்து அணிக்கு அணித்தலைவராக  பொறுப்பேற்று  செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அதைத் தொடர்ந்து மாணவிகள் பலரும் கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடி வருகின்றனர். பள்ளியில் பெற்ற பயிற்சியை தொடர்ந்து தற்போது பல்கலைக் கழக அணிகளிலும் இந்த மாணவிகள் விளையாடி வருகின்றனர். முழுவதும் கிராமப்புறங்களில் பயிலும் இந்த மாணவர்களுக்கு கால்பந்தாட்ட உபகரணங்கள் கூட சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. அவ்வப்போது யாராவது ஸ்பான்சர் மூலம்  ஸூ உள்ளிட்டவைகளை வாங்கி கொடுத்தால் தான் அவர்கள் அந்த போட்டிகளிலேயேவ் விளையாட முடியும் என்ற சூழல் நிலவி வருகிறது. ஆனாலும் விடாமுயற்சியுடன் இந்த பள்ளி மாணவிகள் பலரும் கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடி, தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டி வருகின்றனர். முழுவதும் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களை கொண்ட இந்த பள்ளிக்கு விளையாட்டு துறை மூலம் கூடுதல் வசதியை செய்து கொடுத்தால் எதிர்காலத்தில் விளையாட்டின் மூலம் நமது பெருமையை நிலைக்கச் செய்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மாணவர்கள் விளையாட்டு மைதானம் வசதி செய்து தர தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில். விளையாட்டு மைதானத்திற்கு ஆன நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. எப்போது மைதானம் அமைத்து தருவீர்கள் என்று கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்கும்போதெல்லாம், விரைவில் என்ற வார்த்தையை மட்டும் உதிர்க்கின்றார்களே தவிர, இது வரை அந்த மாணவர்களுக்கான மைதானம் அமைப்பதற்கு அடிக்கல் கூட நாட்டப்படவில்லை.
 
இதனால், விளைநிலங்களில் மாணவிகள் கால்பந்தாட்ட பயிற்சியை கடும் சிரமத்திற்கு இடையே மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக புதிய விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என்பதே மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளாக உள்ளது. 
Continues below advertisement
Sponsored Links by Taboola