புதுச்சேரி, காரைக்காலில் சாராயம், கள்ளுக்கடைகள் ஏலம் இன்று ஆன்லைனில் நடக்கிறது. மதுவிலை உயர்வால் சாராயக்கடைகளை ஏலம் எடுக்கக் கடும் போட்டி நிலவுகிறது. புதுச்சேரி, காரைக்காலில் 108 சாராயக்கடைகள், 89 கள்ளுக்கடைகள் என மொத்தம் 197 கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் அனைத்துக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆன்லைனில் பொது ஏலம் விடப்படும். கடைகளுக்கு ஆண்டு கிஸ்தி தொகை ஏலம் மூலம் நிர்ணயிக்கப்படும். ஒரு குத்தகை ஆண்டு என்பது ஜூலை 1ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதியில் முடியும்.
முதல் ஆண்டு குத்தகை எடுக்கப்படும் கடைகளுக்கு அடுத்த 2 குத்தகை ஆண்டுகளுக்கு முந்தைய ஆண்டின் கிஸ்தி தொகையில் 5 சதவீதம் உயர்த்தப்பட்ட கிஸ்தி தொகை செலுத்தினால் கடையின் உரிமம் புதுப்பித்துத் தரப்படும். 3 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் பொது ஏலம் கடந்த மாதம் 23ஆம் தேதி நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோன பரவல் காரணமாக கிஸ்தி தொகையை ஒரு மாதம் பெற்று ஒரு மாத உரிமம் கால நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்த காலக்கெடுவும் இன்றோடு நிறைவடைகிறது.
இதையடுத்து மதுபானக் கடைகள், கள்ளுக்கடைகளுக்கு ஆன்லைனில் ஏலம் நடந்தது. நேற்று காலை 11 மணி முதல் 12 மணி வரை கள்ளுக்கடைகள், 12 மணி முதல் மதியம் ஒரு மணி வரை சாராயக்கடைகளுக்கு ஆன்லைனில் ஏலம் நடந்தது. புதுவையில் கரோனா முதல் அலை ஊரடங்கு தளர்வில் மதுபானக்கடைகள் திறக்கப்பட்ட போது சிறப்பு வரி விதிக்கப்பட்டது. இதனால் தமிழகத்துக்கு இணையாகப் புதுவையில் மதுபானங்கள் விலை உயர்ந்தது. இதனால் மதுப்பிரியர்கள் சாராயக் கடைகளை நாடினர். இதனால் சாராய வியாபாரம் களை கட்டியது.
இப்போது கரோனா 2-வது அலை ஊரடங்கு தளர்வைத் தொடர்ந்து மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. கரோனா வரியை நீக்கினாலும், இப்போது மதுபானங்களின் விலை அதிகபட்ச சில்லறை விற்பனை விலையிலிருந்து 20 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இதனால் ரூ.100க்கு விற்ற மதுபானங்களின் விலை ரூ.120 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் பலர் மீண்டும் சாராயக்கடைகளை நாடத் தொடங்கியுள்ளனர்.
இனிவரும் காலத்திலும் மதுபானங்களின் விலை உயர்வால் சாராய விற்பனை அதிகரிக்கும் என வியாபாரிகள் கருதுகின்றனர். இந்த நிலையில் சாராயக்கடை, கள்ளுக்கடை ஏலம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஆன்லைனில் நடந்த ஏலத்துக்காகப் பலரும் முன்பதிவு செய்திருந்தனர். நேரம் தொடங்கியது முதல் பலரும் போட்டி போட்டிக்கொண்டு சாராயக் கடைகளுக்கு ஏலம் கேட்டனர். அதிக விலைக்கு ஏலம் கேட்டவர்களுக்கு சாராயக்கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. சாராயக்கடைகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதால் புதுவை அரசுக்குக் கூடுதல் வருவாய் ஏற்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. கலால்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, புதுச்சேரி எல்லையோரக் கடைகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. அத்துடன் கடந்த ஆண்டு ரூ.80 கோடி வருவாய் கிடைத்தது. இம்முறை ரூ.90 கோடி வரை வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று குறிப்பிட்டனர்.