கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் கடந்த ஆண்டு முதல் தொடர்ந்து ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்தந்த மாநிலங்களில் பேருந்து சேவைகளும் மாநில அரசு சார்பில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு ரத்து செய்யப்பட்டிருந்தது. அதன்பின்னர் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு படிப்படியாக பல்வேறு மாநிலங்களில் விரைவு ரயில் சேவை மட்டும் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் மாநிலம் விட்டு மாநிலம் செல்லக்கூடிய விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில், இன்று வரை பல்வேறு மாநிலங்களில் விரைவு ரயில் சேவை மட்டுமே நடைபெற்று வருகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் பொதுமக்களின் வசதிக்காக உள்ளூர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில் திருவாரூர் - காரைக்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே  முன்பதிவில்லாத ரயில் இன்று முதல் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. காரைக்குடி திருவாரூர் ரயில் நிலையங்களுக்கு இடையே முன்பதிவில்லாத ரயில் சேவையை ஆகஸ்டு 4 ஆம் தேதி இன்று முதல் முன்பதிவில்லா ரயில் சேவை மறு அறிவிப்பு வரும் வரை  இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

திருவாரூர் - காரைக்குடி சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர மற்ற நாட்களில், திருவாரூரிலிருந்து காலை 8.15 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2.15 மணிக்கு காரைக்குடி சென்றடையும். காரைக்குடியிலிருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு, இரவு 8.30 மணிக்கு திருவாரூர் சென்று சேரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

 

இந்த முன்பதிவில்லா சிறப்பு ரயில்களில் இருபுறமும் டீசல் என்ஜின் உள்ள டெமோ வகை ரயில் பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயில்கள் மாங்குடி, மாவூர் ரோடு, திருநெல்லிக்காவல், அம்மனூர், ஆலத்தம்பாடி, மணலி, திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, ஒட்டங்காடு, பேராவூரணி, ஆயங்குடி, அறந்தாங்கி, வளரும்  மாணிக்கம்  பெரியகோட்டை, கண்டனூர், புதுவயல், ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட ரயில் சேவை, கேட் கீப்பர் பற்றாக்குறை, கொரோனா ஊரடங்கு காரணங்களால் காரைக்குடி, திருவாரூர் இடையேயான ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் மீண்டும் காரைக்குடி திருவாரூர் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. திருவாரூர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.



 

முன்னதாக இந்தியாவிலேயே கடைசி மீட்டர்கேஜ் ரயில் பாதை இந்த திருவாரூர் காரைக்குடி ரயில் பாதையாக இருந்த நிலையில், இதனை அகல ரயில் பாதையாக மாற்ற வேண்டும் என திருவாரூர் மாவட்ட மக்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். அதனடிப்படையில் கடந்த 2006ஆம் ஆண்டு மத்திய ரயில்வே துறை அமைச்சர் மீட்டர் கேஜ் பாதையை அகற்றி விட்டு, அகல ரயில்பாதை பணிகள் தொடங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தார். பின்னர் அதற்கான பணிகள் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு அகலப்பாதை பணிகள் முடிவடைந்து, திருவாரூர் காரைக்குடி ரயில் விடப்பட்டது. அதே நேரத்தில் ரயில்வே கேட் கீப்பர்கள் இல்லாத காரணத்தினால் ஒவ்வொரு நிறுத்தத்திற்கு முன்பு ரயிலை நிறுத்தி ரயிலில் வரும் நபர்கள் ரயில்வே கேட்டை மூடி விட்டு, பின்னர் ரயில் அந்த இடத்தை கடந்து சென்ற பின்னர் மீண்டும் ரயில்வே கேட்டை திறந்து விட்டு ரயிலை இயக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் 3 மணி நேரத்தில் செல்ல வேண்டிய பயணத்தை 7 மணி நேரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் ரயிலில் பயணம் செய்ய மக்கள் விரும்பவில்லை. 



இதனால் போதிய பயணிகள் வராத காரணத்தினாலும், கொரோனா தாக்கத்தின் காரணத்தினாலும் திருவாரூர் காரைக்குடி ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அனைத்து இடங்களிலும் ரயில்வே கேட் கீப்பர் பணியை மத்திய அரசு நிரப்ப வேண்டும் மேலும் திருவாரூர் காரைக்குடி ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட மக்கள் தொடர்ந்து மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வந்த நிலையில் தெற்கு ரயில்வே நிர்வாகத்தினர் இன்று முதல் திருவாரூர் காரைக்குடி ரயில் சேவை இயங்கும் என அறிவித்து இன்று முதல் ரயில் சேவை தொடங்கி உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பு மக்கள் தங்களது நன்றியையும் மகிழ்ச்சியையும் மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளனர்.