கொரோனா வைரசுக்கு எதிரான அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஜெர்மனி,இத்தாலி, பிரான்சு உள்ளிட்ட முக்கிய ஐரோப்பிய நாடுகள் தற்காலிகத் தடை விதித்துள்ளன. இந்த நாடுகளை அடுத்து லத்வியா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளும் பட்டியலில் இணைந்துள்ளன. இந்த மருந்துப் பயன்பாட்டினால் ரத்தக்கட்டு ஏற்படுவதாக எழுந்த புகார்களை அடுத்துத் தற்போது இந்தத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.  கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பூசி பட்டியலில் அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் தடுப்பூசிகளும் இடம்பெற்றிருந்தன.  புகார்கள் ஒருபக்கம் எழுந்தாலும் தடுப்பூசிகள் பயன்படுத்துவதற்கு ஆரோக்கியமானதுதான் என்று உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.



இதுதொடர்பாக அண்மையில் கூடிய ஐரோப்பிய மருந்துகள் கூட்டமைப்பு, உலக சுகாதார நிறுவனம் கூறியதையே தானும் வலியுறுத்தி வருகிறது, ”ரத்தக்கட்டு போன்ற பக்க விளைவுகள் இல்லை என்று மறுப்பதற்கில்லை ஆனால் கொரோனா வைரஸால் ஏற்படும் இறப்பு உள்ளிட்ட பாதிப்புகளுடன் ஒப்பிடுகையில் இந்தப் பக்கவிளைவுகள் ஒன்றுமே இல்லை.அதனால் தடுப்பூசிகளை போட்டுக்கொள்வதே அறிவுபூர்வமானதாக இருக்கும்” என அந்த அமைப்பு கூறியுள்ளது.  


                              


உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியான டாக்டர் சௌம்யா சுவாமிநாதன் கூறுகையில், “மக்கள் அச்சப்பட வேண்டாம். மருந்துகளில் ஏதேனும் தீவிரமான பாதிப்புகள் இருந்தால் சுகாதார நிறுவனமே அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும். அதுவரை தொடர்ந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்” என்கிறார்.