தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் இல்லை என சௌமியா அன்புமணி குற்றச்சாட்டு
மகளிர் உரிமை மீட்பு பயணம்
தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் அந்த வகையில் இன்று திருவள்ளூர் மாவட்டம் திருத்தணிக்கு சென்ற அவர். திருத்தணி முருகன் கோவிலில் வழிபாடு செய்தார். பிறகு திருத்தணியை தமிழ்நாட்டுடன் இணைக்க அரும்பாடுபட்ட விநாயகம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் ஆர்.கே. பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கூடி இருந்த நிலையில் அவர்கள் முன்னால் பெண்களுக்கான உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
சௌமியா அன்புமணி மேடைப்பேச்சு:
திருத்தணி முதலில் ஆந்திராவுடன் தான் இருந்தது. அப்போது இந்த பகுதியில் சுற்றி இருந்த 350 தமிழ் கிராமங்கள் கட்டாயம் தெலுங்கு மொழியை படிக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டனர். பிறகு அது பெரிய போராட்டமாக மாறியது. என்னுடைய தாத்தா உள்ளிட்ட பல போராளிகள் இறங்கி ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்த்து திருத்தணியை ஆந்திராவில் இருந்து பிரித்து தமிழ்நாட்டுடன் இணைத்தனர்.
1960-இல் திருத்தணியை மீட்டு தமிழ்நாட்டுடன் இணைத்தனர். அதற்காக போராடிய முக்கிய தளபதி எங்கள் தாத்தா திருத்தணிகை விநாயகம். அதனால்தான் அவரை 'தணிகை மீட்ட தளபதி விநாயகம்' என்று மக்கள் அழைப்பார்கள்.
அரசியல் நாகரிகம் இல்லை
எங்கள் தாத்தா காங்கிரஸ் கட்சியில் இருந்தார் சட்டமன்றத்தில் திமுகவினருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுவார். ஆனால் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா இறந்த போது கதறி அழுதார். அந்த அளவுக்கு அரசியல் நாகரீகம் அன்றைய காலகட்டத்தில் இருந்தது ஆனால் இன்று அது பன்ற அரசியல் நாகரிகம் இல்லை.
திருத்தணி ஆந்திர மாநிலத்தின் எல்லையோரத்தில் இருப்பதனால் கஞ்சா எளிதாக கடத்தப்படுகிறது திருத்தணியில் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப் பொருட்கள் புழங்குகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 60,000 கிலோ கஞ்சா புழங்குவதாக தகவல் வருகிறது.
சிறுவர்களை கூட கஞ்சா போதை
ஏற்கனவே மூன்று தலைமுறையை இந்த ஆட்சியாளர்கள் போதைக்கு அடிமையாக்கி விட்டார்கள். தற்போது இளம் தலைமுறைமையும் போதைக்கு அடிமையாக்கி வருகிறார்கள். 8-10வயது சிறுவர்களை கூட கஞ்சா போதைக்கு அடிமையாக்கி வருகிறார்கள்.
கஞ்சா போதையில் இளைஞர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரிவதில்லை இன்றைக்கு சமுதாயத்தில் பல்வேறு சமூக சீர்கேடுகள், அட்டூழியங்கள், பாலியல் அத்துமீறல்கள், வன்கொடுமைகள் நடைபெறுவதற்கு கஞ்சா போதை தான் மிகப்பெரிய காரணமாக இருக்கிறது.
குழந்தைகளுக்கு பிடிக்காத விஷயங்களை செய்ய பெற்றோர்கள் அனுமதிக்காதீர்கள் தெரிந்தவர்கள் உறவினர்களாக இருந்தாலும் குழந்தைகளுக்கு பிடிக்கவில்லை என்றால் அவர்களை தொட அனுமதிக்காதீர்கள். தற்போது சமுதாயத்தில் சீர்கேடுகள் அதிகரித்து வருகிறது எனவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
போதை பொருள் நடமாட்டத்தை ஒழிக்க வேண்டும்
காவல்துறையை நம்பி தான் குழந்தைகளை படிக்க அனுப்புகிறோம் பிள்ளைகளை வேலைக்கு அனுப்புகிறோம் காவல்துறைக்கு தெரியாமல் யாரும் இங்கு போதை பொருளை விற்க முடியாது. காவல்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பி போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை.
குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் கொடூரர்கள் மீது நீதித்துறை கடுமையான தண்டனை வழங்க வேண்டும் அவர்கள் மீது எந்த தயவு தாட்சனையும் கூடாது. மக்கள் தரமான உணவை எடுத்துக் கொள்வதை உறுதி செய்வதை தான் அரசாங்கங்கள் வேலையாக செய்ய வேண்டும் மாறாக போதை பொருளை கொண்டு வருவதற்கு, டாஸ்மாக் கடையை திறப்பதற்கு எதற்காக ஒரு அரசாங்கம் நமக்கு வேண்டும் என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
டாஸ்மாக் திறக்கும் திமுக அரசு
திருத்தணியில் ஒரு நெசவு பூங்கா கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தார்கள் ஆனால் திமுக அரசு நிறைவேற்றவில்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் பூ விவசாயிகளுக்கு ஒரு சென்ட் பேக்டரி கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். ஆனால் அதையும் திமுக அரசாங்கம் நிறைவேற்றவில்லை. மக்கள் கேட்ட நல்ல திட்டங்களை எல்லாம் கொண்டு வராமல் யாரும் கேட்காத டாஸ்மாக் கடைகளை திமுக அரசு திறக்கிறது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக அன்புமணி இருந்தபோது ஏழை எளிய மக்களுக்கு பயன்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தான் 108 ஆம்புலன்ஸ் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஒரு நபருக்கு பயன்படுத்திய ஊசியை மற்றொரு நபருக்கு பயன்படுத்தக் கூடாது என்ற திட்டத்தை செயல்படுத்தினார். இது போன்று சுகாதாரத் துறையில் பல்வேறு நல்ல திட்டங்களை அன்புமணி கொண்டு வந்தார்.
தமிழ்நாட்டு ஆண்கள் குடித்துவிட்டு டாஸ்மாக்கில் கொடுத்த பணத்தை,பெண்களுக்கு உரிமை தொகையாக தமிழக அரசு கொடுக்கிறது. இன்றைக்கு பெண் குழந்தைகளை வெளியில் அனுப்பிவிட்டு பெற்றோர்கள் பயத்துடன் வீட்டில் இருக்க வேண்டிய சூழல் இருக்கிறது.
செவிலியர்கள் விவகாரம்:
தமிழ்நாட்டில் 208 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் இல்லை. இன்றைக்கு செவிலியர்கள் அவ்வளவு போராட்டங்களை செய்து கொண்டிருக்கிறார்கள் கொரோனா காலத்தில் அவ்வளவு பணி செய்த அந்த செவிலியர்களுக்கு ஏன் பணிநிலைப்பு செய்யவில்லை என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
செவிலியர்களை குண்டு கட்டாக தூக்கிச் சென்று நடு ராத்திரியில் பேருந்து நிலையத்தில் இறக்குகிறீர்களே உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா?. வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் பொதுமக்கள் சிந்தித்து நல்ல முடிவை எடுத்து வாக்களிக்க வேண்டும் அப்போதுதான் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் மது போதை இல்லா தமிழ்நாடு உருவாகும் என தெரிவித்தார்.