தமிழ் திரையுலகின் பல கதாநாயகர்கள் இருந்தாலும் பெண்களின் மனம் கவர்ந்த நாயகர்களாக சிலரே இருந்தார்கள். அவ்வாறு பெண்களின் உள்ளம் கவர்ந்த நாயகனாக 90களில் உலா வந்தவர் அப்பாஸ்.
ஹாப்பி ராஜ் படத்தில் அப்பாஸ்:
இவரது ஹேர்ஸ்டைல், தோற்றம் இவரை தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஹீரோவாக உருவாக்கும் என்று எதிர்பார்த்தது. ஆனால், தொடர் தோல்விகள், மோசமான கதைத் தேர்வால் தமிழ் சினிமாவில் இருந்த நீண்ட காலமாக விலகியிருந்தார்.
இந்த நிலையில், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள ஹாப்பி ராஜ் படத்தில் முக்கிய வேடத்தில் அப்பாஸ் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரமோ நேற்று வெளியானது.
ரசிகர்கள் ஆர்வம்:
இந்த படத்தில் ஜிவி பிரகாஷிற்கு தந்தையாக அப்பாஸ் நடித்துள்ளார். ஹாப்பி ராஜ் படத்தின் ப்ரமோ காட்சி நேற்று வெளியானது. அதில் அப்பாஸ் ஜார்ஜ் மரியனுடன் சண்டையிடுவது போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முழுக்க முழுக்க நகைச்சுவையாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் அப்பாஸை மீண்டும் திரையில் பார்த்த பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம், தனி ஒருவன் படம் மூலமாக அரவிந்த்சுவாமி கம்பேக் கொடுத்தது போல கம்பேக் தராமல், காமெடி கதாபாத்திரத்தில் அப்பாஸ் கம்பேக் கொடுத்திருக்கிறாரே? என்று வேதனையும் சிலர் தெரிவிக்கின்றனர். எதுவாகினும் இனிமேல் மீண்டும் தமிழ் சினிமாவில் அப்பாஸை வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் காணலாம்.
ஹீரோ, துணை ஹீரோ:
காதல் தேசம் படம் மூலமாக அப்பாஸ் நாயகனாக அறிமுகமானார். அவருக்கு அந்த படத்திலே மிகப்பெரிய ரசிகைககள் கூட்டம் உருவாகியது. பின்னர், விஐபி, பூச்சூடவா ஆகிய வெற்றிப் படங்களில் நடித்தார். ரஜினிகாந்துடன் படையப்பா படத்திலும்,கமலுடன் ஹேராம் படத்திலும், மம்மூட்டியுடன் ஆனந்தம் படத்திலும், சத்யராஜுடன் மலபார் போலீஸ், அஜித்துடன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மாதவனுடன் மின்னலே படத்திலும் நடித்தார். ஏராளமான படங்களில் அப்பாஸ் நடித்தாலும் தனது திரை வாழ்வின் முக்கியமான கட்டத்தில் இரண்டாம் ஹீரோவாக நிறைய படங்களில் நடித்தார். அதுவும் அவருக்கு ஒரு சறுக்கலாக அமைந்தது.
11 வருடத்திற்கு பிறகு தமிழ் சினிமா:
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தியிலும் நடித்துள்ளார். அவர் ஹீரோவாக தனியாக நடித்த படங்கள் அவருக்கு பெரிய வெற்றியைத் தராததால் அவர் 2010க்கு பிறகு பெரியளவில் நடிக்கவில்லை. கடைசியாக மலையாளத்தில் பச்சகல்லம் என்ற படத்தில் நடித்தார். கடைசியாக தமிழில் 2014ம் ஆண்டு ராமானுஜன் படத்தில் நடித்திருந்தார். தற்போது 11 வருடங்களுக்கு பிறகு ஹாப்பி ராஜ் படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு வந்துள்ளார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அப்பாஸ் இனி சினிமாவில் தொடர்ந்து நடிக்க ஆர்வம் காட்ட உள்ளார். 1999ம் ஆண்டு மட்டும் இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் 8 படத்தில் நடித்தார். வெளிநாட்டில் கடந்த சில வருடங்களாக வசித்து வந்த அப்பாஸ் தற்போது மீண்டும் திரையுலகிற்கு திரும்பியுள்ளார்.