கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தையொட்டி மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோவிலில் நடை திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை கடந்த 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சாமி கோவிலில் 41 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து, கருப்பு உடை அணிந்து இருமுடி கட்டி தலையில் சுமந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய மணிக்கணக்கில் வரிசையில் நின்று சரண கோஷம் முழங்க 18 படி ஏறி ஐயப்பனை வழிபடுவர். குறிப்பாக மண்டல பூஜை நெருங்கி வரும் நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சபரிமலை சன்னிதானம், 18-ம் படி, மாளிகப்புரம் கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பக்தர்கள் செல்போன்கள், கேமரா ஆகியவற்றின் மூலம் புகைப்படம், வீடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு சுகாதாரத்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகள் என்ன?
- சபரிமலைக்கு வரும் பக்தர்கள் 18-ம் படிக்கு மேல் சன்னிதானம் பகுதியில் செல்போன் பயன்படுத்தவும், புகைப்படம், வீடியோ எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக சபரிமலைக்கு வரும் பக்தர்கள் நீர்நிலைகளில் நீராட கட்டுப்பாடு விதிப்பு.
- சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் குளிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- ஆறுகள், குளங்களில் குளிக்கும் போது மூக்கு மற்றும் வாய் பகுதிகளை நன்றாக மூடியபடி குளிக்க வேண்டும்.
- குளிக்க பயன்படுத்திய துணியை நன்றாக உதறிய பிறகு தலை மற்றும் முகத்தை துடைக்க வேண்டும்.
- பக்தர்கள் கண்டிப்பாக கொதிக்க வைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும்.
- சபரிமலை உள்ளிட்ட இடங்களில் திறந்த வெளிகளில் மலம் கழிக்க தடை உள்ளதால், சுகாதாரமான கழிப்பறைகளை பக்தர்கள் பயன்படுத்த வேண்டும்.
- சபரிமலை, பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் மருத்துவமனைகளில் பாம்பு கடிக்கான விஷ எதிர்ப்பு மருந்துகள் உள்ளன.
- மலை ஏறும் போது சோர்வான நிலைக்கு செல்லுதல், மார்பு வலி, மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். 04735-203232 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அவசர உதவியை நாடலாம்.
- சபரிமலை பயணத்திற்கு முந்தைய நாட்களில் உடல் சோர்வு உள்பட உடல் நல பிரச்சினைகளை தவிர்க்க நடை பயிற்சி, உடற்பயிற்சி என லேசான பயிற்சிகளில் பக்தர்கள் ஈடுபட வேண்டும்.