சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்; ஏற்காடு மலர்க்கண்காட்சி 4 நாட்களுக்கு நீட்டிப்பு

Yercaud Flower Show: பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பல தரப்பு மக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Continues below advertisement

ஏற்காட்டில் 47வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்காடு கோடை விழாவை காண்பதற்காக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏற்காடு வந்த வண்ணம் உள்ளனர்.

Continues below advertisement

மலர்க்கண்காட்சி நீட்டிப்பு:

ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை மாலை முடிய இருந்த நிலையில், ஏற்காடு அண்ணா பூங்காவை அமைத்துள்ள மலர்க்கண்காட்சி மட்டும் 30ஆம் தேதி வரை (4 நாட்கள்) நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பல தரப்பு மக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, நாளை மாலை 47வது ஏற்காடு கோடை விழா நிறைவு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் தோட்டக்கலைத்துறை, வனத்துறை என பல்வேறு துறைகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்க உள்ளனர். மேலும், கோடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற சுற்றுலா பயணிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.  

மலர் கண்காட்சி:

மலர் கண்காட்சியை ஒட்டி அண்ணா பூங்காவில் ஏழு லட்சம் மலர்களைக் கொண்டு காற்றாலை வடிவிலான மலர் அலங்கார வடிவமைக்கப்பட்டுள்ளது. கடல்வாழ் உயிரினங்களான டால்பின், மீன், முத்துச்சிப்பி, ஆக்டோபஸ் என பல்லாயிரக்கணக்கான வண்ண மலர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட மலர் அலங்காரங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. குறிப்பாக, அண்ணா பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் தாவரவியல் பூங்காவில் ஆயிரக்கணக்கான பூந்தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள பல வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. ஏற்காடு ரோஜா என்றழைக்கப்படும் டேலியா மலர்கள் மட்டும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் பூத்து குலுங்குகின்றன. மேலும் மேரி கோல்டு, டேலியா, வெர்பினா, பிளாக்ஸ் உள்ளிட்ட மலர் வகைகளும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன. இதனிடையே பல லட்சக்கணக்கான மலர்களைக் கொண்டு நடைபெற்ற வரும் பிரம்மாண்ட மலர்க் கண்காட்சி சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகிறது.

இன்றைய நிகழ்வுகள்:

ஏற்காடு கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் செல்லப் பிராணிகள் கண்காட்சி இன்று நடைபெற உள்ளது. குறிப்பாக இந்த செல்லப்பிராணிகள் கண்காட்சியில் பூனைகள் மற்றும் அல்சேசன், பொமரேனியன், ஜெர்மன் செப்பார்டு, டாபர்மேன், லேபர்டார், பக், காக்கர் ஸ்பேனில் டேசன்ட் போன்ற வெளிநாட்டு இன நாய்கள் கலந்து கொள்ள உள்ளது. இதேபோன்று ராஜபாளையம், கோம்பை, சிப்பிபாறை, கன்னி போன்ற நாட்டின வகை நாய்களும் கலந்து கொள்ள உள்ளன. இதில் காவல் துறையைச் சார்ந்த செல்லப் பிராணிகளுக்கான கீழ்படிதல் மற்றும் சாகச நிகழ்ச்சி போன்று போட்டிகள் இடம்பெற உள்ளன. இக்கண்காட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த செல்லப் பிராணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். இதைத்தொடர்ந்து மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பல்சுவை நிகழ்ச்சி, சேர்வையாட்டம், சிலம்பாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.

போக்குவரத்து மாற்றம்:

47வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்கள் கட்சியின் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. நாளை மாலை ஏற்காடு கோடை விழா முடிய உள்ள நிலையில், வார இறுதி நாட்களான இன்றும், நாளையும் சுற்றுலா பயணிகள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சேலத்தில் இருந்து கோரிமேடு வழியாக ஏற்காடு செல்லும் சேலம் - ஏற்காடு பிரதான மலைப்பாதை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. கோரிமேடு வழியாக ஏற்காடு செல்லும் மலை பாதை ஏற்காடு செல்வதற்கு மட்டும் பயன்படுத்தப்படும். ஏற்காட்டில் இருந்து சேலம் வருவதற்கு குப்பனூர் வழியை பயன்படுத்துமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

Continues below advertisement