தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெங்குசெட்டிபட்டியை சேர்ந்த சத்யா என்பவருக்கும், போச்சம்பள்ளி அடுத்த கொட்டாவூரைச் சார்ந்த பொண்ணுவேல் என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பொண்ணுவேல் ஆவின் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். ஆனால் பொண்ணுவேலுக்கும், மனைவி சத்யாவின் தங்கை கவிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில் பொண்ணுவேல், மனைவியின் தங்கை கவிதாவை திருமணம் செய்து கொள்ள விருப்பப்பட்டு அவருடன் மிக நெருக்கமாக பழகி வந்துள்ளார். இது மனைவி சத்யாவிற்கு தெரிய வந்துள்ளது. இதனிடையே இருவருக்கும் இடையே அடிக்கடி சிறு தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த மே மாதம் பொண்ணுவேல், தன்து மனைவி சத்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, நான் கட்டிய தாலியை கழட்டி கொடுத்து விடு, நான் உன் தங்கைக்காக இரண்டாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும், அதற்கு நீ தடையாக இருக்கிறாய் என்று தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து கவிதாவிடம், பேசி கவிதாவை திருமணம் செய்து கொள்ள அழைத்துச் சென்றுள்ளார். இதனால் மணமுடைந்த சத்யாவின் தம்பி விஷம் அறிந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த குடும்பத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தற்பொழுது சென்னையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கவிதாவும் பொண்ணுவேலும், திருமணம் செய்து கொண்டு தனியாக வீடு எடுத்து தங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து சத்யா தனது பெற்றோருடன் சேர்ந்து காரிமங்கலம் காவல் நிலையத்தில் தன்னை ஏமாற்றிய கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். ஆனால் காவல் நிலையத்திற்கு வந்த பொண்ணுவேல் மற்றும் கவிதா இருவரும் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை எனக் கூறி கையொப்பமிட்டு சென்றுள்ளனர். ஆனால் பொன்வேலின் தந்தை வேலாயுதம், உறவினர்களிடம் இருவரையும் வைத்து என் மகன் வாழப் போகிறான். ஒரு வேலை சத்யாவிற்கு அதில் விருப்பமில்லை என்றால், அவன் கட்டிய தாலியை கழட்டி கொடுத்து விடட்டும். அதற்கு உரிய இழப்பீடு தருகிறோம் என தெரிவித்துள்ளார்.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சத்யா தன்னை ஏமாற்றி தனக்கு தெரியாமல் தனது தங்கையை திருமணம் செய்து கொண்ட கணவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, என்னுடன் சேர்த்து வாழ வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருமபுரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் தனக்கு காரியமங்கலம் காவல் நிலையத்தில் உரிய நீதி கிடைக்கவில்ல. எனக்கு நீதி கிடைக்க வேண்டுமென்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.