அரசு கேபிள் டிவி இணைப்புகள் கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் தனியார் சேவைக்கு செல்வதால் வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி, அரசு கேபிள் டிவி இணைப்பை சரி செய்து கொடுக்க வலியுறுத்தி தருமபுரி மாவட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

 

தருமபுரி மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அரசு கேபிளில் டேக் டிவி செட்டாப் பாக்ஸ் பெற்று வாடிக்கையாளர்களுக்கு கேபிள் டிவி இணைப்பை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தருமபுரி மாவட்டம் முழுவதும் 50,000 மேற்பட்ட டேக் டிவி செட்டாப் பாக்ஸை வாடிக்கையாள்ர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அரசு கேபிள் டிவி இணைப்பு ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதில் சாஃப்ட்வேர் பிரச்சினையால் தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டிவி சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் தனியார் சேவைகளை நாடி செல்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு கேபிள் டிவி இணைப்புகளில் உள்ள வாடிக்கையாளர்கள், தற்பொழுது தனியார் சேவையை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளனர். இதனால் அரசு கேபிள் டிவி இணைப்பில், கேபிள் டிவி ஆபரேட்டர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலையில் உள்ளது.

 

 



 

மேலும் கேபிள் டிவி இணைப்பு 10 நாட்களாக வராததால், மாதம் தோறும் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இணைந்து, கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அரசு கேபிள் டிவி இணைப்பு ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதால், தனியார் சேவைக்கு வாடிக்கையாளர்கள் செல்வதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்க சூழல் உள்ளது. எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து அரசு கேபிள் டிவி இணைப்பை சரி செய்து கொடுக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

 

 



 

 

தருமபுரி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 



 

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துப்புரவு பணியாளர்கள் காவலர்கள் என 200க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட காலங்களில் கொரோனா பாதிப்புக்குள்ளான நோயாளிகளை, எந்த ஒரு அச்சமும் இன்றி அறையை பராமரிப்பது, நோயாளிகளுக்கு உதவி செய்வது போன்ற பணிகளை செய்து வந்துள்ளனர். ஆனால் இந்த ஒப்பந்த பணியாளர்களுக்கு தேவையான ஓய்வறை, அமர்ந்து உணவு உண்பதற்கு போதிய இடவசதி மற்றும் கழிப்பறை வசதி உள்ளிட்டவைகள் செய்து தரப்படவில்லை. மேலும் ஒப்பந்த ஊழியர்கள் என்பதால் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் கண்ணிய குறைவாக நடத்தி வந்துள்ளனர். மேலும் கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வரும் இந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வும் இல்லை.

 



 

 

இதனால் அரசு மருத்துவக் கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் சார்பில்,  தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை நாகரிகமாக நடத்த வேண்டும், தங்களுக்கு தேவையான ஓய்வறை, கழிவறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். அதேபோல் ஊதிய உயர்வு கொடுத்து பணி, நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களை கண்ணிய குறைவாக நடத்தும் மருத்துவமனை ஊழியர்கள் செவிலியர்களை, கண்டித்து முழக்கங்களை எழுப்பினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் தொழிற்சங்கத்தினர் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.