சேலம் மாவட்டம் கருமந்துறை மலைப்பகுதியில் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பழங்குடியினர் நல வாரிய அட்டை வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கருமந்துறை பகுதியில் உள்ள பழங்குடியினர் 2,000 பேருக்கு நலவாரிய அடையாள அட்டைகளும், கூட்டுறவு துறை சார்பில் 213 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவியினை அமைச்சர் வழங்கினார்.
பின்னர் மேடையில் பேசிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, ”தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, பழங்குடியினர் நலத்துறைக்கென தனிக்கவனம் செலுத்தி அவர்களின் முன்னேற்றத்திற்காகவும், தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மலைவாழ் பகுதிகளில் வாழும் மக்களுக்கு முழுமையாக சென்றடையும் வகையிலும் மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் நாள்தோறும் காலையில் தினசரி பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளின் மீது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தொடர்புடைய மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு உத்தரவுகளை வழங்கி வருகிறார். தமிழகத்தில் தொழில் முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்காகவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் ஆலோசனை வழங்கி வருகிறார்” என்று கூறினார்.
மேலும், “முத்தமிழ் அறிஞர் கலைஞர் போலவே தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைத்து வருகிறார். முதலமைச்சர் சில நாள்களுக்கு முன்னர் சென்னையில் நரிக்குறவர் இனத்தைச் சார்ந்தவரின் வீட்டிற்குச் சென்று உணவு அருந்தி குறைகளைக் கேட்டறிந்தார். அதேபோல், நேற்றைய முன்தினம் 54 மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட தம்பதிகளுக்கான திருமண விழாவினை தலைமையேற்று நடத்தி வைத்தார். முதலமைச்சராக பதவியேற்று ஒன்றரை ஆண்டுகளில் தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகள் மட்டுமல்லாமல், அறிவிக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில் பள்ளி குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டி திட்டமும் அடங்கும். மேலும், வேளாண்மைத் துறைக்கென தனியாக ரூ.40,000 கோடி நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர் தேக்கம் அமைப்பதற்கும், நிலத்தடி நீரை பெருக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய மக்களை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். தேர்தலுக்கு முன்னர் நடைபெற்ற கூட்டத்தில் அடுத்த 10 ஆண்டு காலத்தில் தமிழகத்தின் வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான அனைவரும் ஒருங்கிணைந்து பயணிக்க வேண்டும்” என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்துள்ள சின்னகல்ராயன் பகுதியில் கைக்கான்வளவு காட்டாற்றின் உபரி நீரை கரியகோவில் நீர்த்தேக்கத்திற்கு நீர் திருப்பும் முடிவுற்ற பணியினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். பின்னர், சேலம் மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பழைய பேருந்து நிலையத்தினை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். அப்போது நடத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டிருந்தார். பணிகளை விரைந்து முடிக்கும் படி அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். அப்போது, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன், சேலம் மாநகர ஆணையாளர் கிறிஸ்தவராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.