சேலம் அம்மாபேட்டை மார்க்கெட் தெரு பகுதியை சேர்ந்தவர் பிரபு (39) வாழை இலை உரிமையாளராக உள்ளார். இவரது மனைவி ஷாலினி (22) இருவருக்கும் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகி ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் தன்வீட்டிற்குள் புகுந்து தன்னிடம் இருந்த நகையை பறித்துக் கொண்டு கணவர் பிரபுவை கொலை செய்துவிட்டு சென்று விட்டதாக கூறி மனைவி ஷாலினி கூச்சல் எழுப்பியுள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தபோது பிரபு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிரபுவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், மனைவி ஷாலினி கொலை செய்து இருக்கலாம் எனவும் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். பின்னர் விரைந்து வந்த அம்மாபேட்டை காவல் துறையினர் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்றபோது வீட்டின் இரண்டாம் மாடியில் கொலை நடந்திருந்த நிலையில், வீட்டின் அடித்தளம் மற்றும் முதல் தளத்தின் வீட்டுக் கதவுகள் பூட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. அடித்தளம் மற்றும் முதல்தளம் பூட்டப்பட்ட நிலையில் இரண்டாம் மாடியில் பிரபுவை கொலை செய்து விட்டு எப்படி கொலையாளி தப்பியோடி இருக்க முடியும் என்ற கேள்வி காவல்துறைக்கு எழுந்து.
கொலை சம்பவம் குறித்து கொல்லப்பட்ட பிரபுவின் மனைவி ஷாலினியிடம் போலிசார் நடத்திய விசாரணையில், ஷாலினி கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் ஆண் நண்பருடன் பேசி வந்ததும் இதை அறிந்த கணவர் பிரபு, பலமுறை கண்டித்தும் கேட்காததால் ஷாலினியிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டதும், இருப்பினும் தன்கணவருக்கு தெரியாமல் அடிக்கடி செல்போனை எடுத்து பேசி வந்தததும் தெரியவந்தது.
அடிக்கடி ஷாலினியை சந்திக்க பிரபுவிற்கு தெரியாமல் சிலர் வந்து செல்வது தொடர்ந்த நிலையில், கொலை நடந்த அன்று இரவு கணவர் பிரபு சீக்கிரம் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தன் கள்ளக்காதலன் காமராஜ் என்கிற அப்புவை ஷாலினி வீட்டிற்குள் இருந்த நிலையில், இருவரும் இணைந்தே பிரபுவை கொலை செய்துள்ளனர்.
தனது கணவர் பிரபுவிவிடம் ஷாலினியும் அவரது கள்ளக்காதலர் காமராஜ் என்கிற அப்புவும் கையும் களவுமாக பிடிபட்டதால் செய்வதறியாமல் கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கணவரை கொன்ற நிலையில் காவல் துறையிடம் இருந்து தப்பிப்பதற்காக தனது நகைகளை பறிப்பதற்காக அடையாளம் தெரியாத நபர்கள் வந்ததாகவும், அவர்கள்தான் கணவர் பிரபுவை கொலை செய்து விட்டதாகவும் ஷாலினி கூறியதும் தெரியவந்தது.
இக்கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் கூறுகையில் பிரபுவை திருமணம் செய்து கொள்வதில் ஷாலினிக்கு விருப்பம் இல்லை என்றும், உறவினர்களின் கட்டாயத்தின்பேரிலேயே ஷாலினி தனது தாயின் அண்ணனான பிரபுவை திருமணம் செய்ததாகவும் கூறுகின்றனர். பிரபு உடனான திருமண வாழ்க்கையில் சற்றும் விருப்பமில்லாதாலேயே இக்கொலை சம்பவம் நடந்ததாக தெரிவித்தனர். பிரபு கொலையில் கைது செய்யப்பட்ட ஷாலினி, அப்பு என்கிற காமராஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.