கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்கள் பெய்து வரும் கன மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளது. இதன் காரணமாக அங்கு இருக்கும் அணைகளில் இருந்து தண்ணீருக்கும் முழுமையாக காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. கர்நாடகா மாநிலத்திலிருந்து 1,30,000 கன அடி தண்ணீர் தற்போது வந்து கொண்டிருப்பதால் மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீர் நிலையங்களில் நின்று புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுக்கக் கூடாது குளிக்க மற்றும் துணி துவைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 



மாலை 3 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் வரத்து 1,20,000 கன அடியில் இருந்து 1,30,000 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 120.00 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி ஆகவும் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து எட்டு நாட்களுக்குப் பிறகு உபரி நீர் காவிரி ஆற்றில் 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 1,07,000 கன அடி திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக 23 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது அணையில் இருந்து மொத்தம் வினாடிக்கு 1,30,400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று இரவு குள்ளாக மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்தான் 1.5 லட்சம் கன அடி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேட்டூர் அணை தற்போது முழு கொள்ளளவில் இருப்பதால் அனைத்து வரும் நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. 



காவிரி கரையோரப் பகுதிகளில் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு அருகில் செல்வதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். குறிப்பாக, காவிரியில் இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் நீரில் இறங்கி குளிப்பதையோ, நீச்சல் அடிப்பதையோ, மீன் பிடிப்பதையோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ, புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுப்பதையோ, காவிரி கரையோரங்களில் நின்று வேடிக்கை பார்ப்பதையோ முற்றிலும் தவிர்த்திட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நீர்வளத்துறை மற்றும் சேலம் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தது.


மேலும், காவிரிக் ஆற்றின் கரையில் உள்ள சேலம், திருச்சி, கரூர், ஈரோடு, நாமக்கல், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் உள்ளிட்ட 11 காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.