உலக நாடு முழுவதும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இவ்வாறு பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும், தாக்குதல்களை தடுக்க, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கேரளா மாநிலம் கோட்டையத்தை சேர்ந்த விமல் என்ற இளைஞர் முடிவு செய்துள்ளார். இதற்காக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டுள்ளார்.

 

இதனை தொடர்ந்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் செல்ல கடந்த ஒன்றாம் தேதி கன்னியாகுமரியில் முதல் நாள் நடைப்பயணத்தை தொடங்கினார். இந்த நடைப்பயணத்தில் பொதுமக்களை சந்தித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி வந்தார்.  இதனையடுத்து இன்று தருமபுரி மாவட்டத்திற்கு வந்த இளைஞரை, தருமபுரி நான்கு ரோடு சந்திப்பில் நகர காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான காவல் துறையினர் சிறப்பான வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து நடைப்பிணமாக வந்த இளைஞருக்கு காவல் துறையினர் தேனீர், பிஸ்கட் மற்றும்  தண்ணீர் கொடுத்து, சிறு நேரம் கலந்துரையாடினர்.

 


 

அதனை தொடர்ந்து, சிறு குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தல், குழந்தை தொழிலாளர், இளம் வயது திருமணம் செய்து கொள்வதால், ஏற்படும் பாதிப்புகள்  குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை எவ்வாறு கண்டறிதல், அவற்றை எவ்வாறு எதிர்கொள்ளுதல் என்பதை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை, கேரள இளைஞர் பொதுமக்களைக்கு வழங்கினார். தொடர்ந்து நடைபயணமாக கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக இன்று  கர்நாடக மாநிலம் பெங்களூரு செல்ல உள்ளார். 

 

தொடர்ந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கடந்த ஒன்றாம் தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் தொடங்கிய கேரள இளைஞர் விமல், இன்று வரை  சுமார் 550 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்துள்ளார்.  மேலும் இன்னும் சுமார் 3500 கிலோ மீட்டருக்கு மேல் நடை பயணம் செல்லவுள்ளார். இந்நிலையில் நடைப் பயணமாக வரும் கேரள இளைஞர் விமலனுக்கு, பல்வேறு மாவட்டங்களில் காவல் துறையினர் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

 

தொடர்ந்து பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையான சட்டங்களை நிறைவேற்ற வேண்டும். இந்த குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் தண்டனைகளை கடுமையாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்த விழிப்புணர்வு நடைப் பயணம் செல்வதாக கேரள இளைஞர் விமலன் தெரிவித்தார்.