சேலம் சிலிண்டர் வெடி விபத்தில் காயமடைந்த நபர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சையை புறக்கணித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மழையின் காரணமாக வீட்டில் பீரோவில் உள்ள, ஆவணங்கள், நகைகள் உள்ளிட்ட உடைமைகளுக்கு பாதுகாப்பு இல்லை. அதனை எடுக்க போலீசார் அனுமதி மறுப்பதாகவும் குற்றம்சாட்டினர்.
சேலம் மாவட்டம் கருங்கல்பட்டி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 4 வீடுகள் சிலிண்டர் வெடித்த விபத்தில் தரைமட்டமானது. மேலும் நான்கிற்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், 12 நபர்கள் படுகாயமடைந்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத் தொடர்ந்து விபத்து நடந்த பகுதியில் கைரேகை நிபுணர் உதவியுடன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கட்டிடங்களின் இடிபாடுகள் ஏற்பட்டுள்ளதன் காரணமாக வீடுகளில் குடியிருப்புவாசிகள் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் தங்களது உடைமைகள், பொருட்களை மீட்டு தரக்கோரி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வந்து முற்றுகையிட்டனர். தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வந்தால் தங்குவதற்கு இடமில்லை என்றும், மழையின் காரணமாக வீட்டில் பீரோவில் உள்ள, ஆவணங்கள், நகைகள் உள்ளிட்ட உடைமைகளுக்கு பாதுகாப்பு இல்லை. அதனை எடுக்கவும் போலீசார் அனுமதி மறுப்பதாகவும் குற்றம்சாட்டினர்.
மேலும் இடிபாடுகளை விரைவாக அப்புறப்படுத்தி, தங்கள் உடைமைகளை மீட்டுதர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து வந்த கோட்டாட்சியர் விஷ்ணுவர்தனி காயமடைந்தவர்களை சந்தித்து இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசு சார்பில் வழங்கப்படும் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்டவை புதிதாக வழங்கப்படும் என கோட்டாட்சியர் கேட்டுக் கொண்டதையடுத்து அவர்கள் மீண்டும் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு சென்றனர்.
மேலும், விபத்தில் இடிந்து விழுந்த நான்கு வீடுகள் மட்டுமே அரசு கவனம் செலுத்தி வருகிறது. சிலிண்டர் விபத்தில் அருகிலிருந்த பல வீடுகள் சேதமாகி உள்ளது அவற்றை அரசு உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். நேற்று மாலை விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு அரசு உடனடியாக வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று அரசிற்கு கோரிக்கை விடுத்தார். பின்னர், பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண பொருட்களை வழங்கினார்.