தருமபுரி மாவட்டத்தில் தொடர் மழையால், முன்னாடியே மரவள்ளி அறுவடை செய்யும் விவசாயிகள்-ஒரே ஆலைக்கு கிழங்கு வருவதால், நிறுத்தி வைத்து அழுகுவதால், விவசாயிகள் கவலை.
தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப் பட்டி பகுதியில் மரவள்ளி கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் சுமார் 5000 ஏக்கரில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. இதில் முள்ளுவாடி, தாய்லாந்து, பர்மா, குங்குமரோஸ் ஆகிய ரகங்களில் மரவள்ளி பயிரிட்டுள்ளனர். மேலும், வறட்சி காலங்களில், நிலத்தடி நீர் மட்டம் குறையும் போது, சொட்டு நீர் பாசனம் அமைத்து சாகுபடி செய்கின்றனர். ஒரு ஏக்கருக்கு 10 முதல் 13 டன் வரை விளைச்சல் கிடைக்கிறது. இங்கு விளைவிக்கப்படும் மரவள்ளி கிழங்குகள் சேலம், ஆத்துார், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கிழங்கு மில்லுக்கு விற்பனைக்கு எடுத்து செல்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் மரவள்ளி கிழங்கு 60 சதவீதம் ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் தொழிற்சாலைகளுக்கு விற்பனைக்கு செல்கிறது.
தருமபுரி மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு அரைவை ஆலை பாப்பிரெட்டிப்பட்டியில் மட்டுமே இயங்கி வருகிறது. மேலும் பெரும்பாலும் சேலத்தில் உள்ள ஆலைக்கு அதிக அளவில் மரவள்ளி கிழங்கு விற்பனைக்கு செல்கிறது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக தருமபுரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் பல பகுதிகளில், மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ள வயல்களில், தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் கிழங்குகள் அழுகி விடுமோ என்ற அச்சத்தில், விவசாயிகள் தற்போது மரவள்ளி கிழங்குகளை அறுவடை செய்யும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் அறுவடை செய்யும் மரவள்ளிக் கிழங்குகளை பாப்பிரெட்டிப்பட்டி தனியார் அரவை ஆலைக்கு கொண்டு செல்கின்றனர். ஆனால் அங்கு ஒரு நாளைக்கு 600 முதல் 800 டன் வரை மட்டுமே அரைக்கும் தன்மை உடையதால், ஏற்கனவே முன்பதிவு செய்து அறுவடை செய்யப்பட்ட கிழங்குகள் அரைக்கப்பட்டு வருகிறது. தற்போது கிழங்கு ஒரு டன் ரூ.6000 வரை விலை போகிறது. ஆனால் விலை குறைந்து விடும் என்று விவசாயிகள் அவசர அவசரமாக அறுவடை செய்து, எடுத்து வருவதால், ஆலை நிர்வாகம் அரைவை செய்ய முடியாமல் கிழங்கு வாங்குவதில்லை. இதனால் அறுவடை செய்யப்பட்ட கிழங்குகள் லாரிகளில் ஆலை முன்பு காத்து நிற்கிறது. அறுவடை செய்ய பட்டு 24 மணி நேரத்தில் அரைத்தால் மட்டுமே கிழங்குக்கு பாயிண்ட் கிடைக்கும், அதிகளவு கிழங்கு வரத்தால் காத்து நிற்பதால் அழுகும் நிலைக்கு தள்ளபடுகிறது. இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைந்து பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் சில கிழங்குகள் மழையால், அழுகி வருவதால், ஆலையில் எடுக்காமல் திருப்பி அனுப்புகின்றனர். ஆனால் கிழங்குகளை அறுவடை செய்து, அரைவைக்கு எடுத்து வந்தால், ஆலையில் திருப்பி அனுப்பினால் என்ன செய்வதென்று அறியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். ஆனால் ஏற்கனவே மழையால் கிழங்கு பாதிக்கப்பட்டுள்ளது, ஆனால் கூலி ஆட்களை வைத்து அறுவடை செய்து வந்தாலும், ஆலையில் எடுக்காததால், கூலியாட்களுக்கு கொடுக்க கூட வருவாய் இல்லை, கிழங்கு அழுகும் நிலையுள்ளது. போதிய விலை இல்லை என மிகுந்த வேதனையடைந்துள்ளனர். மேலும் மொத்தமும் நிராகரிக்காமல், எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.