தருமபுரி மாவட்டம், அரூர் அருகே சித்தேரி மலை கிராம பஞ்சாயத்தில் மலைவாழ் மக்கள் மட்டும்  வசித்து வரும் 62 கிராமங்கள் உள்ளது. இந்த பகுதியைச் சார்ந்த பலர் ஆந்திரா மாநிலத்தில் பல்வேறு வனப் பகுதியில் செம்மரம் வெட்டும் கூலி வேலைக்கு செல்கின்றனர். இந்நிலையில் நேற்று இரவு சித்தேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட குண்டல்மடு அருகே மிதிகாடு கிராமத்தைச் சேர்ந்த ராமன் சித்தேரி பஸ் ஸ்டாப்பில் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த தகவலறிந்த அரூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று ராமன் உடலை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்த்வமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ராமனை எடுத்து வந்த கார் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் காவல் துறை விசாரணையில் ஞாயிற்றுக் கிழமை கூலி வேலைக்கு செல்வதாக கூறி, ராமன், மாதையன், பழனி, முருகன், திருப்பதி உள்ளிட்ட சிலர் சென்றுள்ளனர். இந்நிலையில்  ராமன், உடல் காயங்களுடன் நேற்று இரவு சித்தேரியில் இறந்து கிடந்துள்ளார். மேலும் சிலர் ஆந்திரா மாநில அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

 





ஓட்டுநர் பார்த்திபன்


 

ஆனால் நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் செம்மரம் வெட்டி கடத்தும் கும்பலை வனத் துறையினர் சுற்று வலைத்து பிடித்துள்ளனர். இதில் தப்பி ஓடியவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து ராமன் ஆந்திராவில் உயிரிழந்தவர் அல்லது கொலை செய்யப்பட்டு சித்தேரி மலையில் காரில் கொண்டு  வீசப்பட்டாரா என்ற சந்தேகம் காவல் துறைக்கு எழுந்துள்ளது. மேலும் வனத்துறையில் இறந்தவரை இடைத்தரகர்கள் காரில் எடுத்து வந்து சித்தேரியில் வீசியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் கார் ஓட்டுநர் பார்த்தீபன் மற்றும் உரிமையாளர் சண்முகத்திடம் தருமபுரி மாவட்ட எஸ்பி சி.கலைச்செல்வன் விசாரணை நடத்தி வருகிறார். இதில் கிருஷ்ணகிரி வரச் சொன்னது யார்? இடைத்தரகரா அல்லது உடன் வேலைக்கு சென்றவர்களா?. மேலும் இறந்த நிலையில் கொண்டு வரப்பட்டாரா? இல்லை உயிருடன் இருந்தாரா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 


கார் உரிமையாளர் சண்முகம்


 


இதில் எத்தனை பேர் தொடர்புடையவர்கள் என்பதை அறிய கார் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் செல்போனை பறிமுதல் செய்து, அழைப்புகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ராமனுடன் சென்ற மற்றவர்களின் நிலை என்ன? அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்த விவரம் தெரியவில்லை. கடந்த 2015 ஆம் ஆண்டில் திருப்பதி வனப் பகுதியில் செம்மரம் வெட்டியதாக சித்தேரி பஞ்சாயத்தை சேர்ந்த 7 பேரை ஆந்திரா  வனத் துறையினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்றது. ஆனாலும் தற்போது வரை சித்தேரி ஊராட்சிக்குட்பட்ட மலை கிராமங்களிலிருந்து செம்மரம் கடத்தல் தொழிலுக்கு மலைவாழ் மக்கள் செல்கின்றனர். இந்த பகுதியில் இருந்து சமீபத்தில் கூட, இடைத்தரகர்கள் மூலம் 50-க்கும் மேற்பட்டோர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.