தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கடந்த 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையின் போது கிராமப் புறங்களில் ஜல்லிக்கட்டு உள்பட பல வீர விளையாட்டுக்கள் நடப்பது வழக்கம். ஜல்லிக்கட்டு விழாவுக்கு பெயர் பெற்ற இடங்கள் மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரமாகும். இந்த பகுதிகளை தவிர சிவகங்கை மாவட்டம் சீராவயல், கம்புணரி, புதூர், அரளிபாளையம், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலை மற்றும் திருச்சி, தேனி ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படுகிறது. இந்த வகையில், சேலம் மாவட்டத்தில் தம்மம்பட்டி, நாமக்கல், தர்மபுரி உள்பட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு, எருதாட்டம் நடத்தப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கெங்கவல்லி, கூலமேடு, கடம்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படும்.


இதன் ஒரு பகுதியாக இன்று (28ம் தேதி) கூலமேட்டில் ஜல்லிக்கட்டு விழா நடத்தப்பட்டது. இதனை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியினை துவக்கி வைத்தார். முன்னதாக மாடுபிடி வீரர்களுக்கு விதிமுறைகள் கூறப்பட்டு உறுதிமொழி ஏற்றனர். கூலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு பகுதிகளில் இருந்து 600 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். அதன் பின்னர் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் தங்களது பலத்தை நிரூபித்து மாடுகளை அடக்கினர். மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு பல்வேறு பரிசுகளை விழா கமிட்டி சார்பில் வழங்கப்பட்டது. இதேபோன்று பிடிபடாத மாட்டின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.



இதுகுறித்து கூலமேட்டை சேர்ந்த தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையினர் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. அதே போல் சேலம் மாவட்டத்தில் கூலமேடு ஜல்லிக்கட்டு விழா பிரசித்தி பெற்றது. இதேபோல் மஞ்சினி, தம்மம்பட்டி, உலிபுரம், பெத்தநாயக்கன்பாளையம், புத்திரகவுண்டம்பாளையம், நாகியம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு, எருதாட்டம் விழா நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக கூலமேட்டில் பொங்கல் பண்டிகையில் உழவர் தினம் அடுத்த நாள் ஜல்லிக்கட்டு விழா நடக்கும். நடப்பாண்டு பல்வேறு காரணங்களினால் இங்கு ஜல்லிக்கட்டு விழா தள்ளிப்போனது. இதையடுத்து இன்று கூலமேட்டில் ஜல்லிக்கட்டு விழா நடக்கிறது. இவ்விழாவில் சேலம் மாவட்டம் முழுவதிலிருந்தும், இதைதவிர நாமக்கல், தர்மபுரி, திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து உம்மனச்சேரி, காங்கேயம், புலிசாரா, தேனிமறை, ஆலம்பாடி, பர்கூர் மலை மாடு, அந்தூர் மாடு உள்பட பல இனங்களை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட காளைகள் விழாவில் பங்கேற்றது. 


விழாவில் மாடுபிடி வீரர்களுக்கு வெள்ளி, தங்கம், சைக்கிள், பாத்திரம், கட்டில், பிரிட்ஜ், பீரோ, வாஷிங்மெஷின், பேன், டிவி உள்பட பல்வேறு பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது. மொத்தம் 300 வீரர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் 12 பேட்ஜ் பிரித்து களத்தில் இறக்கப்பட்டனர். ஒரு பேட்ஜ்க்கு 25 பேர் வீதம் களத்தில் இருந்தனர். ஜல்லிக்கட்டு விழாவை யொட்டி 500 பேர் அமரும் வகையில் கேலரியும், வாடிவாசல் அமைக்கப்பட்டது. மருத்துவத் துறை சார்பில் மாடு பிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனையும், கால்நடைத்துறை சார்பில் கால்நடை பரிசோதிக்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு விழாவையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.