பென்னாகரம், பாலக்கோடு பகுதியில் ஒரு மாதமாக போக்கு காட்டும் யானையை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

 

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் கி.சாந்தி தலைமையில்  நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் தோட்டக் கலைத் துறை, வேளாண் மற்றும் வேளாண் பொறியியல் துறை, பட்டு வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்து அதிகாரிகள் விளக்க உரை ஆற்றினர்.

 

இதனை தொடர்ந்து கடந்த மாத விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கொடுத்த மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விவசாயிகளுக்கு தெரிவித்தனர். இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர், விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அப்பொழுது கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பாலக்கோடு, பென்னாகரம் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டு ஊருக்குள் நுழைவதும், விவசாய நிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவதுமாக இருந்து வருகிறது. மேலும் கடந்த நான்கு நாட்களாக பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட சோமனஅள்ளி  கிராமத்தில் யானை முகாமிட்டு நெல், கரும்பு, வாழை, சோளம், காய்கறிகள் மற்றும் விலை நிலங்களில் விவசாய பயன்பாட்டுக்காக நிறுவப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளை சேதப்படுத்தி வருவதாகவும், உடனடியாக யானையை காட்டுக்குள் விரட்ட வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், யானைகளால் சேதமான பயிர்களை ஆய்வு செய்து,  விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். 



 

அப்பொழுது வனத்துறை அதிகாரிகள் யானைகளை விரட்டும் பணியில் 15-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாகவும்,  மயக்க ஊசி செலுத்தி இரண்டு யானைகளை பிடித்து காட்டுப் பகுதியில் விட, சென்னையில் அனுமதி பெற்றுள்ளதாகவும், அடுத்த வாரத்திற்குள் யானைகளைப் பிடித்து வனத்துள் விடுவதற்கான பணிகள் நடைபெறும் என்று தெரிவித்தார். இதன் மூலம் கடந்த ஒரு மாதமாக பென்னாகரம் மற்றும் பாலக்கோடு பகுதிகளில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளின் அட்டகாசம் நிறைவுக்கு வரவுள்ளது என தெரிவித்தார்.

 

மேலும், சோலைக்கொட்டாய் பகுதியை சேர்ந்த விவசாயி, தனது மின் இணைப்பு வேறு ஒரு நபரின் பெயரில் உள்ளதாகவும், கடந்த இரண்டு வருடங்களாக அலைக் கழிக்கப்பட்டு வருவதாகவும், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து விவசாயிகளை அலைக் கழிக்காமல் உரிய ஆவணங்களை சரி பார்த்து, மின் இணைப்பு  பெயர் மாற்றி வழங்க வேண்டும்.  குறிப்பிட்ட காலத்திற்குள் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையில்லாத சான்றுகளைக் கேட்டு அவர்களை அலைக் கழிக்க கூடாது என மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அரசு துறை அதிகாரிகள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.