சேலம் மாவட்டத்தில் ஆடி பண்டிகை என்பது மிகச்சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் ஆடி மாதம் பண்டிகையானது முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்து இருப்பதால் சேலம் மக்கள் மகிழ்ச்சியோடு ஆடி மாதத்தை வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.



ஆடி மாதத்தில் முதல் நாளான இன்று தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம், தேங்காயில் உள்ள நார்களை எடுத்து, தேங்காயின் மேல் பகுதியில் ஒரு சிறு துளையிட்டு அதில் உள்ள நீரை தனியாக பிரித்தெடுத்துவிட்டு, பின்பு வெள்ளம், நாட்டுச் சர்க்கரை, பச்சரிசி, பாசிப்பருப்பு, முந்திரி மற்றும் பல பொருட்கள் அதோடு சேர்த்து, தேங்காயை உட்பகுதியில் செலுத்தி பின்பு அதனை நெருப்பில் சுட்ட பின் மாரியம்மனுக்கு படைத்து விட்டு ஆடிப்பண்டிகையை, சேலம் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மகிழ்ச்சியாக வரவேற்பார்கள்.


தேங்காய் சுடுவதின் காரணம்:


தேங்காவில் ஓட்டை பிரித்தால் தான் அதில் உள்ள தேங்காய் கிடைக்கும். அதுபோன்ற நம் மனதில் உள்ள கசப்பு, துன்பம், வேதனை என அனைத்தையும் எடுத்து வீசிவிட்டு. வெல்லம், நாட்டுச்சர்க்கரை போன்ற இனிப்புகளை படைத்து, இனிமையாக வாழ்க்கை அருள வேண்டும் என்பதற்காக, ஆடிப் பண்டிகையை சேலம் மக்கள் கொண்டாடுவார்கள்.



இந்த மாதம் முழுவதும் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் திருக்கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படும். ஆடி முதல் நாள் என்பதால் சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது, அம்மாபேட்டை பலபட்டரை மாரியம்மன் கோவிலில் மாரி அம்மனுக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.


இதைத் தொடர்ந்து ஆடி முதல் வாரத்தில் அம்மனுக்கு பூச்சாட்டுதல், இரண்டாம் வாரம் கம்பளி நடுவது, மூன்றாம் வாரம் பூ கரகம் எடுப்பது, அலகு குத்துதல், பொங்கல் வைப்பது, வண்டி வேடிக்கை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பண்டிகை ரத்து செய்யப்பட்டது. கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதால் இந்த ஆண்டு மாரியம்மன் பண்டிகை கொண்டாட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சேலம் மாவட்டம் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்று ஆடி முதல் நாள் என்பதால் காவிரி ஆற்றில் குளிப்பதற்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது காவேரி ஆற்றல் பொதுமக்கள் இறங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி காவிரி ஆற்றில் இறங்கும் முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.