கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பள்ளி ஆசிரியர்கள் மீதான புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு உறுதி அளித்துள்ளார்.


முன்னதாக, இறந்த மாணவியின் உடலை வாங்க மறுத்த மாணவியின் உறவினர்கள் பள்ளி அருகே சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதுமட்டுமின்றி, சாலை மறியலில் ஈடுப்பட்ட உறவினர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர். 


அப்பொழுது போராட்டம் சிறிது நேரத்தில் கலவரமாக மாறி போராட்டக்காரர்கள் காவல்துறை வாகனத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்த, போராட்டக்காரர்களை கட்டுபடுத்த காவல்துறையினர் தடியடி நடத்த தொடங்கினர். 


உறவினர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் நடத்திய கல்வீச்சு தாக்குதலில் கள்ளக்குறிச்சி எஸ்.பி. செல்வகுமார், டிஐஜி பாண்டியன் உள்பட 20க்கு மேற்பட்ட போலீசாருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, காவல்துறை வாகனத்தை கவிழ்க்க போராட்டக்காரர்கள் முயற்சித்த நிலையில், பள்ளி மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். 


இதனால் சின்ன சேலம் பகுதி முழுவதும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் போலீஸ் வாகனத்தை குவித்து வருகின்றனர். 


மேலும், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த வேறு வழியின்றி காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை கலைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.  


இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சைலேந்திர பாபு, "ஆசிரியர்களின் மீதான புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டம் செய்பவர்கள் வன்முறையில் ஈடுபட்டு பொருள்களை சேதப்படுத்தியது கண்டிக்கத்தக்கது. கலவரத்தில் பொருள்களை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


போராட்டத்தை ஒடுக்க 500 ஆயுதப்படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். மாணவி மரணம் தொடர்பான வழக்கில் உரிய புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. கலவரத்தில் ஈடுபடாமல் அமைதிகாக்க வேண்டும். மாணவி இறப்பு விவகாரத்தில் வழக்குப்பதியப்பட்டு கள்ளக்குறிச்சி எஸ்பி தலைமையில் உரிய விசாரணை நடைபெறுகிறது. வன்முறையின் வீடியோ பதிவு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
 
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி 12ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில மாதங்களாக விடுதியில் தங்கி பயின்று வந்த விடுமுறை நாட்களில் பெற்றோரை சந்திக்க செல்வார். இந்நிலையில் ஜீலை 13 ம் தேதி அதிகாலை சுமார் 5 மணியளவில் பள்ளி விடுதி வளாகத்தில் மாணவி அடிப்பட்ட நிலையில் கண்ட விடுதி காவலர் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார்.


இதனையடுத்து மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் மாணவி பள்ளி விடுதியில் உள்ள இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதை சின்னசேலம் காவல் துறையினர் மாணவி மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.