சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று மூன்றாவது அலை வந்தாலும் எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். சேலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 500 படுக்கை வசதிகள் கொண்ட தற்காலிக கோவிட் சிகிச்சை மையங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சேலம் தொங்கும் பூங்காவில் உள்ள பல்நோக்கு அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் சிகிச்சை மையத்தை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கிருஸ்துராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இது தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.



அப்போது அவர் கூறியது, சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொற்று மூன்றாவது அலை வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளதாகவும், சேலம் மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக இனிவரும் காலங்களில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இனி நடைபெறாது புகார் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை பெறுவதற்கு புகார் பெட்டியில் வைக்கப்படவுள்ளது. பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் தனி குழுக்கள் மூலமாக சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் பணியிலும் ஈடுபட்டு உள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். 



மேலும், கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில் இரவு நேர ஊரடங்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ளது இந்த நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் உழவர் சந்தைகளில் ஏராளமான பொதுமக்கள் கூட்டமாக குவிந்து காய்கறிகளை வாங்கி சென்றனர்.  இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகள் நாளை நோய் தடுப்பு விதிகளை கடைபிடித்து வழக்கம் போல் செயல்படும் என வேளாண் துணை இயக்குனர் நாசர் அறிவித்துள்ளார்.



சேலம் மாநகராட்சி பகுதியில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, சூரமங்கலம், தாதகாப்பட்டி ஆகிய இடங்களில் உழவர் சந்தைகள் மற்றும் மாவட்டம் முழுவதும் ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம், இளம்பிள்ளை, எடப்பாடி, தம்பம்பட்டி, ஆட்டையாம்பட்டி ஆகிய பகுதிகளிலும் 11 உழவர் சந்தைகள் உள்ளது. நாளை முழு ஊரடங்கு இருந்தாலும் 11 உழவர் சந்தைகள் வழக்கம்போல செயல்படும் என உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடித்து பொருட்களை வாங்கிச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.