காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்தார். அப்போது கர்நாடகாவில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி பிரதமர் மோடியின் பெயர் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது குறித்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி மேல் முறையீடு செய்துள்ளார். 



இதனிடையே சூரத் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்த 24 மணி நேரத்தில் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. ராகுல்காந்தி மீது அரசியல் பழிவாங்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறி காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் முழுவதும் இன்றைய தினம் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சேலம் மாநகர் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு ஜங்ஷன் ரயில் நிலையத்திற்குள் நுழைய முற்பட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ச்சியாக அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் ரயில் மறியலில் ஈடுபட வேண்டாம் என காவல்துறையினர் கோரிக்கை வைத்தனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்றப்படவில்லை.



பின்னர் காவல்துறையினர் தடையை மீறி ரயில் நிலையத்திற்குள் நுழைந்த காங்கிரஸ் கட்சியினர் நான்காவது நடைமேடையில் வந்து கொண்டிருந்த சென்னையில் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ராகுல்காந்தியின் பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து காவல்துறையினர் ரயில் மறியலில் ஈடுபட்ட 150க்கு மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதனால் சென்னை கோவை இன்டர்சிட்டி ரயில் 15 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சேலம் மத்திய மாவட்ட தலைவர் பாஸ்கர் கூறுகையில், காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். மத்திய அரசு திட்டமிட்டு ராகுல் காந்தியின் எம்பி பதவியை பறித்துள்ளது. அதனை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் கடந்த 19 ஆண்டுகளாக ராகுல் காந்தி வசித்து வந்த அரசு பங்களாவை காலி செய்துள்ளனர். ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியினரின் வீடும் சொந்தமானது. அவர் எப்போதும் நினைத்தாலும் இங்கு வந்து எங்கள் வீடுகளில் தங்கிக் கொள்ளலாம் என்று கூறினார்.