சேலம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது மாம்பழம். கோடைகாலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய சேலம் மாம்பழத்திற்கு தனி மவுசு உண்டு. முக்கனிகளின் முதன்மையான கனியாக உள்ளது மாம்பழம் சீசன் தற்போது தொடங்கியுள்ளது. மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் இறுதிவரை மட்டுமே கிடைக்கக் கூடிய சேலம் மாம்பழத்தை சிலர் ருசிக்காகவும், கூடுதல் மேல் தோற்ற அழகிற்காகவும் செயற்கையான முறையில் மாம்பழத்தை பழுக்க வைக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மாம்பழ சீசன் தொடங்கும் போது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடைகளில் சோதனை செய்து செயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை பறிமுதல் செய்வார்கள். இந்த ஆண்டு மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் சேலத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் மாம்பழ மொத்த விற்பனையாளர்கள் மற்றும் மாம்பழ வியாபாரிகளுக்கான கூட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கதிரவன் கலந்து கொண்டு மாம்பழ வியாபாரிகளிடம் எவ்வாறு மாம்பழங்களை பதப்படுத்த வேண்டும். செயற்கையான முறையில் மாம்பழங்களை பழுக்க வைப்பவர்கள் மீது எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என விளக்கினார். இந்த கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மாம்பழ வியாபாரிகள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர். 



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கதிரவன் கூறுகையில், "சேலம் மாநகர் பொருத்தவரை 25 மொத்த வியாபாரிகள் உள்ளனர். அவர்களுடன் இன்று மாம்பழங்கள் விற்பனை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் பழங்களை வாங்கும் போது பார்த்து வாங்க வேண்டும் என்றும், செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்களில் சுவை, மனம், நிறம் முற்றிலும் மாறுபட்டிருக்கும் என்று கூறினார். மேலும் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை மக்கள் எளிதில் கண்டறியலாம். பழங்கள் மீது கருப்பு நிற வட்டம், மாம்பழத்தின் உள்ளே வெவ்வேறு நிறங்களில் இருப்பது, மாம்பழத்தின் நடுப்பாகத்தில் வெள்ளை நிறத்தில் இருப்பது, மாம்பழம் கடினமாக இருப்பது செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பழங்கள் என கண்டறியலாம்" என்றார். 



மேலும், செயற்கையான பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை மக்கள் உட்கொள்ளக்கூடாது. அவ்வாறு செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்களை உண்பதால் உடலுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி வயிற்று எரிச்சல் கடைசி கட்டத்தில் புற்றுநோய் கூட வர நேரிடும். எனவே இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை மட்டுமே உண்ண வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். எத்திப்பான் தெளிப்பு முறையில் வியாபாரிகள் செயற்கை முறையில் பழுக்க வைப்பது கண்டறியப்பட்டால் பழங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் அவர் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் படியும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைப்பது கண்டறிந்தால் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். உணவு தரம் குறித்த புகார்களுக்கு 9444042322 என்ற எண்ணிற்கு போன் செய்தோ அல்லது வாட்ஸ் அப் மூலமாக தகவல் கொடுத்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.