பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் கடந்த 12-ஆம் தேதி அதிகாலை திடீரென ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 வீரர்கள் பரிதாபமாக பலியாகினர். இந்த நான்கு வீரர்களில் தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டம் மேட்டூர், வனவாசி அருகே உள்ள பனங்காட்டை சேர்ந்த கமலேஷ், தேனி மாவட்டத்தை சேர்ந்த யோகேஷ் குமார் ஆகிய இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் உயிரிழந்த வீரர்களுக்கு நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை நிறைவு பெற்றது. இறந்த ராணுவ வீரர்களின் உடல்கள் நேற்று முன்தினம் மாலை சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குறிப்பாக சேலத்தை சேர்ந்த கமலேஷ் உடன் பஞ்சாபில் இருந்து விமானம் மூலமாக கோயம்புத்தூருக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு ராணுவ வீரருக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து இருந்து ராணுவ ஆம்புலன்ஸில் சொந்த ஊரான சேலம் மேட்டூர் அருகே உள்ள வனவாசி கிராமத்திற்கு எடுத்துவரப்பட்டது. 



அப்போது உயிரிழந்த ராணுவ வீரர் கமலேஷ்க்கு அரசு மரியாதை வழங்க வேண்டும் என்று கூறி, ராணுவ வீரர் கமலேஷ் உடல் எடுத்து வரப்பட்ட ஆம்புலன்ஸ் முன்பாக மேச்சேரி, வனவாசி பிரதான சாலையில் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 4 மணி நேரத்திற்கு மேலாக சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனிடையே காவல்துறையினிடம் கிராம இளைஞர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த ராணுவ வீரர் உடல் சாதாரண ஆம்புலன்ஸில் எடுத்து பந்த நிலையில் நான்கு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு ராணுவ வாகனம் வரவழைக்கப்பட்டு வாகனத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் கமலேஷ் உடலை வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. வரும் சாலையெங்கும் மலர்கள் தூவி உடல் வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது.


இந்த ஊர்வலத்தில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட ராணுவ வீரர் கமலேஷ் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது அனைவரையும் வேதனையடைய செய்தது. உயிரிழந்த ராணுவ வீரர் கமலேஷ் உடலுக்கு ராணுவ அதிகாரிகள், வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இடுகாடு அமைந்துள்ளது. இடுக்காட்டில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்படடது. இந்த கிராமத்தில் ராணுவ வீரர் கமலேஷ் உயிரிழப்பு அனுசரிக்கும் விதமாக பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. ராணுவ வீரர் மரணம் அடைந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.