மே 24-ஆம் தேதி, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்


நாளை மறுநாள் திங்கட்கிழமை மாலை விமானம் மூலம் சேலம் விமான நிலையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தருகிறார். அங்கிருந்து மேட்டூர் செல்லும் வழியில் தீவட்டிப்பட்டியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. மேட்டூரில் இரவு தங்கும் அவர் மே 24-ஆம் தேதி காலை காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார். இதனைத்தொடர்ந்து அன்றைய தினம் மதியம் 2 மணியளவில் ஆத்தூர் அருகே செல்லியம்பாளையம் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்ற உள்ளார்.



மேட்டூர் அணைக்கு அதிக நீர்வரத்து உள்ளது. இன்றைய நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்ட அளவு 115.35 அடியாகவும் நீர் இருப்பு 86.25 டிஎம்சி அடியாகவும் உள்ளது. அதிக நீர்வரத்து தொடர்வதால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து வழக்கமாக நீர் திறக்கப்படும் நாளான ஜூன் 12க்கு முன்பாகவே, 24.5.2022 முதல் நீரைத் திறந்துவிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள். டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து மே மாதம் தண்ணீர் திறக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். 1957 ஆம் ஆண்டிற்குப் பிறகு மே மாதத்தில் மேட்டூர் அணை நீர் வரத்து 40,000 கன அடியை கடந்து உள்ளது.



கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரித்து வந்தது. நேற்று முன் தினம் அணைக்கு வினாடிக்கு 29,072 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 29,964 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 46,353 கன அடியாக அதிகரித்துள்ளது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா, தாளடி சாகுபடிக்கான பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீரானது மூடப்பட்டது. 


கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.