தருமபுரி அடுத்த அண்ணஙாகரம் கிராமத்தில் இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான சுப்பிரமணியசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலுக்கு  சொந்தமாக அருகில் உள்ள இடத்தில் கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பு, அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு, அரசு இலவச வீட்டுமனைகள் வழங்கியுள்ளது. அதில் அந்த மக்கள் வீடு கட்டி, பல தலைமுறைகளாக தற்பொழுது வரை வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியைச் சார்ந்த கோபு என்பவர் கோயில் நிலம் முழுவதையும், ஆக்கிரமிப்பு செய்து, இறந்து போன தந்தை பெயரில் போலியாக ஆவணங்களை தயாரித்து உள்ளார். தொடர்ந்து கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு கட்டிடங்களை கட்டி வந்துள்ளார். ஆனால் அரசு வழங்கிய இடத்தில் வீடு கட்டி வசித்து வரும் கிராம மக்களை, கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, போலியாக பட்டா பெற்றுள்ளதாக பல்வேறு அலுவலகங்களில் மனு கொடுப்பதும் தொடர்ந்து கிராம மக்களை மிரட்டியும் வந்துள்ளார்.



 

இதனை தொடர்ந்து கடந்து சில நாட்களுக்கு முன்பு மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் சார் ஆட்சியர் இந்த பகுதிகளை விசாரணை செய்து கிராம மக்களுக்கு வழங்கப்பட்ட இடம் அரசு வழங்கியது தான் என அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். ஆனாலும் கோபு தொடர்ந்து கிராம மக்களை மிரட்டுவதும், இடத்தை காலி செய்ய வேண்டும் என வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, போலி ஆவணங்கள் தயாரிக்க இந்து அறநிலைத்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருந்து வருவதால், கிராம மக்களை மிரட்டும் கோபு மீதும், அவருக்கு உடனடியாக உள்ள இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும் என கூறி அண்ணசாகரம் கிராமத்தைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட மக்கள் தனித்தனியாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். 



இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடத்திலும் கிராம மக்கள் தனித்தனியாக மனு அளித்தனர். மேலும் தொடர்ந்து அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டி தனக்கு சொந்தம் என தந்தை இறந்து போன தந்தை பெயரிலும் போலியான ஆவணங்களை தயாரித்து பதிவு செய்துள்ள கோபு மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம மக்களுக்கு உரிய பாதுகாப்பை மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.