தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அடுத்த கூத்தப்பாடி மடம் பகுதியை சேர்ந்தவர் கர்ணன் என்பவரின் மகன் விஸ்வநாதன் (37),  மும்பையில் சிப்ஸ் கடை வைத்திருந்தார். கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு கூத்தப்பாடி வந்த விஸ்வநாதன் மீண்டும் மும்பைக்கு வேலைக்கு செல்லாமல் வீட்டிலியே இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி காலையில் பென்னாகரத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அப்போது விஸ்வநாதன் மற்றும் அவரது நண்பர்கள் மாதேஷ், சதீஷ்குமார், வெங்கடேஷ் ஆகிய நான்கு பேரும் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால்  அவர்களை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. மேலும் அவர்களது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது தொடர்பாக விஸ்வநாதனின் மனைவி மஞ்சுளா ஒகேனக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
அந்த புகாரில், தனது கணவரின் செல்போனில் இருந்து அவரின் தம்பியான பூபதிக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் விஸ்வநாதன் மற்றும் அவரது நண்பர்கள் மூவரையும் கடத்தி வைத்திருப்பதாகவும்,  80 லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் விடுவோம் இல்லை என்றால் கொலை செய்து விடுவோம் என மிரட்டினர் என புகார் மனுவில் கூறி இருந்தார். இது தொடர்பாக ஒகேனக்கல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசுவநாதன் தம்பியை தொடர்பு கொண்ட தொலைபேசி என் சிக்னலை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த தொலைபேசி எண் சிக்னல் மேட்டூர் அடுத்த புக்கம்பட்டி பகுதியில் கடத்தலில் சம்பந்தப்பட்ட தமிழரசன் தோட்டத்தில் உள்ள வீட்டை சிக்னல் காட்டியுள்ளது.
 
 
அதனை அடுத்து காவல் துறையினர் விரைந்து சென்று தமிழரசனின் தோட்டத்தில் இருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். இதில் கடத்தல் வழக்கில் தொடர்புடைய சேலம் மாவட்டத்தை சேர்ந்த முருகன்(48), காந்தி(43), ரத்தினம்(45), தமிழரசன்(23), கார்த்திகேயன்(24), அவரது தம்பி பாஸ்கர்(22)  ஆகிய ஆறு  பேரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்து, விசாரணை நடத்தியதில், ரூ.80 இலட்சம் கேட்டு நான்கு பேரை கடத்தியது தெரியவந்தது. இதனை தொடர்ந்த் கடத்தப்பட்ட விசுவநாதன் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேரையும் மீட்டனர். பின்னர் இவர்களுடன் கடத்தலில் ஈடுபட்ட சந்திரன் என்கிற  சின்ன கவுண்டர்( 27), சதீஷ்(22), சின்ன குட்டி என்னும் முருகன்(25) ஆகிய மூன்று பேரும் தலை மறைவு ஆகினர். தொடர்ந்து அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் திரைப்பட பாணியில் ஒரு கும்பல், ரூ.80  லட்சம் ரூபாய் கேட்டு வாலிபர் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேரை ஒரு கும்பல் கடத்திய சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.